×

உயர், குறைந்த மின்அழுத்த பிரச்னையால் பல இடங்களில் மின்னணு சாதனங்கள் நாசம்: ஒற்றைக்கம்ப மின்மாற்றி திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை

சென்னை: நீடித்து வரும் உயர் மற்றும் குறைந்த மின்அழுத்த பிரச்னையால் பல இடங்களில் மின்னணு சாதனங்கள் நாசமடைந்து வருகிறது. இதைத்தடுக்கும் வகையில் ஒற்றைக்கம்ப மின்மாற்றி திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஏராளமான மின் இணைப்புகள் உள்ளன. இந்நிலையில் சமீபகாலமாக பலஇடங்களில் மின்தடை மற்றும் குறைந்த மின் அழுத்தம் சம்பந்தமான பிரச்னைகள் நீடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள குப்பம் ஒன்றில் தீப்பிடித்து குடிசை வீடுகள் எரிந்து நாசமானது. இதற்கு மின் அழுத்தம் காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டது. அப்போது சமையல் காஸ் சிலிண்டர்கள் வெடித்தது. பொதுமக்கள் எச்சரிக்கையாக செயல்பட்டதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

பெரம்பலூர், கோனேரிப்பாளையம் பகுதியில் குறைந்த மின்அழுத்தம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்டது. அப்போது மின்மோட்டார், கிரைண்டர், மிக்ஸி, ஏசி உள்ளிட்ட சாதனங்கள் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மக்கள் அங்குள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலூரில் இதுபோன்ற சிக்கல் ஏற்பட்டதால் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச்செய்தனர். இதேபோல் கோவை, திருச்சி, சேலம், மதுரை என பல இடங்களில் குறைந்த மற்றும் உயர் மின் அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் ெபாதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மின்னணு சாதனங்கள் பழுதடைவதால், அவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அவர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். ஆனால் வாரியம் நடவடிக்கையை துரிதப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பல இடங்களில் குறைந்த மின்அழுத்தம் மற்றும் உயர் மின் அழுத்தம் சம்பந்தமான பிரச்னை நீடித்து வருகிறது. உயர் மின் அழுத்தம் ஏற்படுவதற்கு டிரான்ஸ்பார்மரில் இருந்து நேரடியாக கம்பங்கள் மூலமாக மின்சாரம் விநியோகம் செய்வதே காரணம். இவ்வாறு செய்யும் போது அதிகமான மின்சாரம் சில நேரங்களில் பயணிக்கிறது.

அது வீட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் மின்னணு சாதனங்களுக்கு சென்றடையும் போது, அந்த சாதனங்களுக்குள் இருக்கும் கருவிகள் அதை தாங்கும் சக்தி கொண்டதாக இருப்பதில்லை. இதனால் உடனடியாக அவை செயலிழந்து விடுகிறது. சில நேரங்களில் வெடித்தல், தீப்பிடித்தல் போன்ற பிரச்னையும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஒற்றைக்கம்ப மின்மாற்றி திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் மின்னணு சாதனங்களுக்கு எவ்விதமான பிரச்னையும் ஏற்படாது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : places , Power supply, destruction of electronic devices
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...