×

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் குப்பைகளை எரிப்பதால் சுகாதார சீர்கேடு: பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்

ஸ்ரீவைகுண்டம்:  ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி நிர்வாகத்தால் சேகரிக்கப்படும் குப்பைகளை தாமிரபரணி ஆற்றங்கரையில் எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டு பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை 30 ஆண்டுகளுக்கும் மேலாக தாமிரபரணி ஆற்றின் கீழ்பகுதி கரையோரத்தில் கொட்டப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் குப்பை மேடாக காட்சியளித்தது. இந்நிலையில், 2017ல் ஸ்ரீவைகுண்டம் ஆற்றின் கீழ் பகுதியில் அடர்ந்து வளர்ந்திருந்த கருவேல மரங்களை அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணியை அப்போதைய தாசில்தார் தாமஸ்பயஸ் அருள் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் மேற்கொண்டார். அப்போது கரையோரத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பை மேட்டை அகற்றும்படி பேரூராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொண்டார். இதைதொடர்ந்து, பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த மணிமொழியன் ரெங்கசாமி உத்தரவின்பேரில்,

18 வார்டு பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு ஸ்ரீவைகுண்டம் அருகே நத்தம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வளம் மீட்பு பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான மண்புழு உரம் தயாரிக்கும் பணியும் நடைபெற்றது. தாமிரபரணி கரையோரத்தில் கோழிக்கழிகளை கொட்டிய ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆற்றங்கரையோரத்தில் குப்பைகளும், கழிவுகளும் கொட்டக்கூடாது என பேரூராட்சி சார்பில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டது. இந்நிலையில் 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகமே ஆற்றங்கரையில் கொட்டி எரித்து வருகிறது. இதனால், நடைபயிற்சி மேற்கொள்பவர்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆற்றங்கரையோரத்தில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மக்கள் நலச்சங்கத் தலைவர் வக்கீல் ரமேஷ் கூறியதாவது, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தெருக்களில் சேகரிக்கும் குப்பை கழிவுகளை தாமிரபரணி புதுப்பாலம் அருகே கொட்டி வருகிறது. நத்தம் பகுதியில் இயங்கி வரும் திடக்கழிவு மேலாண்மை கூடத்தை முறையாக பராமரிக்காமல் ஆற்றங்கரையில் குப்பைகளை கொட்டி தீவைத்து எரிக்கப்படுவதால் புகைமூட்டமாக காட்சி அளிக்கின்றது. எனவே வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை கூடத்திற்கு கொண்டு செல்லவும், தாமிரபரணி ஆற்றங்கரையையும் பொது மக்களையும் பாதுகாத்திட வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம் என்றார்.

Tags : banks ,administration ,Panchayat , Srivaikuntam Thamiraparani river, panchayat management, negligence
× RELATED தொழில்நுட்ப கோளாறு சீர்...