×

அரசு மையங்கள் சிறப்பாக செயல்பட்டதால் நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சென்னை: நீட் தேர்விற்காக அரசு மையங்கள் நடத்திய தேர்ச்சி மையங்களால் மாணவர்கள் இடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகம் உள்பட அனைத்து  மாநிலங்களிலும் மருத்துவமுறை படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிபெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடும் சோதனை மற்றும் கட்டுப்பாடுகளுடன் கடந்த மாதம் 5-ம் தேதி  நடைபெற்றது. பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு பின்னர் 20 ம் தேதி நடைபெற்றுது. நடப்பு ஆணடுக்கான மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வை இந்தியா முழுவதும் 14  லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் தமிழ் நாட்டில் மட்டும் 14 நகரங்களில் 188 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வை 1.40 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். ஆயுர்வேதா, சித்தா, ஆயுஷ் உள்ளிட்ட  படிப்புகளுக்கும் நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.

இதற்கிடையே, மருத்துவப் படிப்புகான நீட் தேர்வு முடிவுகள் கடந்த 5-ம் தேதி வெளியிடப்பட்டது. மாலை 4 மணி அளவில் வெளியிடப்படும் என அறிவித்த நிலையில் 2 மணி நேரத்திற்கு முன்பே www.nta.ac.in , www.ntaneet.nic.in ஆகிய  இணையதளங்களில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 48.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக டெல்லியில் 74.92 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட 9.01%  மாணவ, மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 57-வது இடம் பிடித்த ஸ்ருதி தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 720 மதிப்பெண்ணுக்கு 685 மதிப்பெண் எடுத்து ஸ்ருதி சாதனை  படைத்துள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த நலின் கந்தேல்வால் என்ற மாணவன் 701 மதிப்பெண் எடுத்து இந்திய அளவில் முதலிடத்தை பிடித்தார்.

இந்நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களிடன் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்பதற்காக 412  மையங்களில் நீட் தேர்விற்காக பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். தனியார் பயிற்சி மையங்களை விட அரசு மையங்கள் சிறப்பாக செயல்பட்டதால் கடந்த ஆண்டை விட நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் 48.57 சதவீதமாக  அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட 413 நீட் பயிற்சி மையங்களில் பயின்ற 2,583 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர், பயிற்சி பெற்றால் எந்தத் தேர்விலும் வெற்றி பெற முடியும் என்றும் அமைச்சர்  செங்கோட்டையன் கூறினார்.

முன்னதாக உத்தரபிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா, தமிழக பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையனுடன் இணைந்து சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டார். தமிழக பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள்,  இருமாநில கல்வி முறைகளை பற்றியும் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் சர்மா, தங்கள் மாநில பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி கற்பிக்கப்படுவதாக குறிப்பிட்டார். மேலும், தமிழக பாடப்புத்தகங்களில்  உள்ள QR CODE முறையை தங்கள் மாநிலத்திலும் கொண்டு வர பரிசீலிப்போம் என்றும் அவர் தெரிவித்தார். தமிழக பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடு மிகச்சிறப்பாக உள்ளது. தமிழ் மொழி தொன்மை வாய்ந்த மொழி; உத்தரபிரதேச  பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளை விருப்ப மொழிகளாக வைத்துள்ளோம் என்றும் கூறினார்.


Tags : Government Centers ,Chengottian ,interview , Government Centers, Neat Selection, Minister Chengottai
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு