×

கொளுத்தும் வெயிலால் வறண்ட குளங்கள் பறவைகளின் தாகம் தீர்க்க களமிறங்கிய இளைஞர்கள்: மரக்கிளைகளில் குடுவைகள் அமைப்பு

சாத்தான்குளம்: அக்னி நட்சத்திரகாலம் முடிந்த பிறகும் நீடிக்கும் வெயில், வறட்சியால் பல இடங்களில் குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டது. இதனால் தண்ணீருக்கு தவிக்கும் பறவைகள் தாகம் தீரவும் பசியாறவும் மரக்கிளைகளில் வாலிபர்கள் தண்ணீர், உணவு வைத்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக  போதிய மழை பெய்யாததால் குளங்கள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. குளங்களில் தண்ணீர் வற்றியதால் காட்டு பகுதியில் உள்ள பறவைகள் நீர் தேடி பல இடங்களில் அலைந்து வருகிறது. இதனையறிந்த சொக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 20க்கும்  மேற்பட்ட வாலிபர்கள் காலியான தண்ணீர் பாட்டில்களின் நடுப்பகுதியை வெட்டி எடுத்து தொட்டி போல் குடுவைகளை வடிவமைத்து அதில் தானியங்களையும்,

தண்ணீரையும் நிரப்பி பறவைகளுக்கு பயன்படும் வகையில் அங்குள்ள மரக்கிளைகளில் கட்டி வைக்கின்றனர். பறவைகள் அதில் உள்ள தானியங்களை உண்டு, தண்ணீரை பருகி மரக்கிளைகளில் இளைப்பாறி வருகிறது. இவற்றை பறவைகள் அதிகம் பயன்படுத்துவதை அறிந்த வாலிபர்கள் சொக்கன்குடிருயிப்பு அதிசய மணல் மாதா ஆலயத்தைச் சுற்றியுள்ள 50க்கு மேற்பட்ட மரங்களில் பாட்டில்களை கட்டி தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.  இதுகுறித்து அப்பகுதி  வாலிபர்கள் கூறுகையில், ‘‘சில பறவைகள் தண்ணீர் கிடைக்காமல் இறந்து கிடந்தது. இதைக்கண்டு வேதனையடைந்தோம். எனவே மரக்கிளைகளில் பாட்டில்களில் குடுவை போல் தயாரித்து தண்ணீர், உணவு நிரப்பி வைத்து வருகிறோம்’’ என்றனர்.  அவர்களின் நல்ல முயற்சிக்கு ஊர்பொதுமக்கள் ஊக்கம் கொடுத்து வருகின்றனர்.

Tags : youngsters , Burning sunlight, dry ponds, bird and youth
× RELATED புளியந்தோப்பு ஆடுதொட்டியில் இருந்து...