×

மணப்பாறை பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் உபரிநீரை குடிநீராக பயன்படுத்தும் அவலம்: கிடப்பில் போடப்பட்ட காவிரி கூட்டுகுடிநீர் திட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தற்போதுள்ள மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி உள்ளிட்ட மூன்று ஊராட்சி ஒன்றிய பகுதி கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கரூர் மாவட்டம் .குளித்தலை காவிரி ஆற்றுபடுக்கையிலிருந்து திருச்சி மாவட்டம். மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றிய பகுதியில் உள்ள 86 ஊராட்சியில் உள்ள சுமார் 574 கிராம பகுதிக்காக காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் இன்றளவு அதனை முறையாக செயல்படுத்தாததே குடிநீர் பிரச்சனை ஏற்பட காரணம் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு முன்பு மணப்பாறை பகுதி குளித்தலை சட்டமன்ற தொகுதியாக இருந்த போது இப்பகுதியில் பெண் எடுக்கவும், பெண் எடுத்து திருமணம் செய்யவும் தயங்கி வந்தனர்.

காரணம் இப்பகுதியில் போதுமான குடி தண்ணீர் இல்லாததும், கிடைக்கும் குடிதண்ணீர் உப்பு மற்றும் சுவையற்ற தண்ணீராக இருந்ததுதான். அதுமட்டும் அல்லாது நகர பகுதியில் வாழ்ந்த மக்கள், மணப்பாறை வழித்தடத்தில் ரயில்கள் நின்று செல்லும் போது ரயில் கழிவறையில் வரும் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் தான், காவிரிகுடிநீர் கிடைக்க பல போராட்டங்களை அப்போதே பொதுமக்கள் கையில் எடுத்து போராட தொடங்கினர். இதனை தொடர்ந்துதான் 1980ம் ஆண்டு குளித்தலை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கருப்பையா தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று சட்டசபையில் பலமுறை காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்துமாறு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து திமுக ஆட்சி காலத்தில் இந்ததிட்டம் செயல்படுத்தப்பட்டது.

நாளடைவில் ஆண்ட அரசுகளும், ஆளுகிற அரசுகளும் அத்திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் விட்டதே இன்றைக்கு மணப்பாறை பகுதி முழுவதும் தண்ணீர் பிரச்சனை ஏற்பட காரணமாகி விட்டது. வெயிலின் தாக்கத்தால் குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள ராட்சத கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவும் குறைந்துவிட்டது. இதனால் மணப்பாறை நகராட்சி மற்றும் மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி
மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தினமும் 30 நிமிடம் கூட குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. சிலபகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பெண்கள் காலிக்குடங்களுடன் ஆங்காங்கே மறியலில் ஈடுபடும் சூழல் உள்ளது. மணப்பாறை பகுதியில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சிலபகுதியில் பல நாட்களாக குடிநீர் விநியோகிக்காததால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

பருவமழை பொய்த்து போனதாலும், பூமி வறண்டு போனதாலும் ஆழ்த்துளை கிணறுகள் அமைத்தும் எந்தபயனும் இல்லை. முன்பெல்லாம் 200 அடியிலிருந்து 300 அடிவரை ஆழ்த்துளை கிணறு அமைத்தால் போதுமான தண்ணீர் கிடைத்தது. ஆனால் தற்போதுள்ள வறட்சியில் 1200 அடி 1300 அடி என ஆழ்த்துளை அமைத்தாலும் ஒரு செம்பு தண்ணீர் கூட கிடைப்பதில்லை எனக்கூறும் அப்பகுதியினர். கிராம ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்த்துளை கிணறுகள் மூலம் வழங்கப்படும் தண்ணீரானது ஒருசில பகுதிகளில் வாரத்திற்கு இரு முறை அல்லது ஒரு முறை வழங்கப்படுவதாகவும் அதுவும் அதிகபட்சமாக அரைமணி நேரத்தில் குழாய்களில் தண்ணீர் வருவது நின்று விடுவதாக கூறும் பொதுமக்கள், அவ்வாறுவரும் தண்ணீரை சிலர் மின்மோட்டார் மூலம் உறிஞ்சுவதால் மற்றவர்களுக்கு குடிநீர் கிடைக்க முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். ஏற்கனவே விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள் தண்ணீரின்றி விவசாயம் முற்றிலுமாக அழிந்து போன சூழலில் குடிப்பதற்கு கூட போதுமான தண்ணீர் கிடைக்காத நிலையில் தங்களது கால்நடைகளை வளர்ப்பதில் பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

மணப்பாறை வழியாக மருங்காபுரி வரை செல்லும் காவிரி குடிநீர் குழாய்களில் கலிங்கப்பட்டி, வெடத்திலாம்பட்டி, தீராம்பட்டி, காவல்காரன்பட்டி, வளநாடு போன்ற ஆங்காங்கே ஒருசில இடங்களில் ஏற்படும் ஏர்வால்வுகளில் வெளியேறும் தண்ணீர்தான் தற்போது கைகொடுப்பதாக கூறும் மக்கள், இந்த தண்ணீரை வைத்துதான் இப்பகுதியில் உள்ள 10கும் மேற்பட்ட கிராம மக்கள், நகர மக்கள் ஓரளவிற்கு சிரமம் இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும், இத்தண்ணீரை பிடிக்க தள்ளுவண்டி, சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தும் வந்து பிடித்து செல்வதாக கூறுகின்றனர். அதே நேரத்தில் அவ்வாறு வெளியேறும் உபரிநீர் பொத்தமேட்டுப்பட்டி அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் சிறியகுட்டைபோல் தேங்கி கிடக்கும் நீரில் கழிவுநீரும் கலக்கிறது. இருப்பினும் வேறுவழியின்றி அத்தண்ணீரையும் தனது பயன்பாட்டு பிடித்து செல்லும் அவலமும் நிகழ்ந்து வருகிறது.

இதேபோன்று மற்ற பகுதிகளில் இல்லாத நிலையில்தான் அப்பகுதியினர் அவ்வப்போது சாலைமறியல், முற்றுகை போன்ற பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இவை அனைத்தும் தற்போதுள்ள நிலைதானே தவிர நிரந்தர தீர்வாக அமையாது. எனவே இனியாவது மணப்பாறை பகுதி மக்களின் சூழ்நிலையை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தை புனரமைத்து வரும் காலகட்டங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படாத ஒருநிலையை உருவாக்கிட வேண்டும் என்பதே மணப்பாறை தொகுதி மக்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது.
வறட்சியின் கோரப்பிடியில் தத்தளிக்கும் மணப்பாறை பகுதிமக்களின் தாகம் தீர்க்கப்படுமா.. காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தை பராமரித்து இனியாவது முறையாக செயல்படுத்தப்படுமா... எனபொறுத்திருந்து பார்ப்போம்.

கிராம மக்கள், நகர மக்கள் ஓரளவிற்கு சிரமம் இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும், இத்தண்ணீரை பிடிக்க தள்ளுவண்டி, சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தும் வந்து பிடித்து செல்வதாக கூறுகின்றனர். அதே நேரத்தில் அவ்வாறு வெளியேறும் உபரிநீர் பொத்தமேட்டுப்பட்டி அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் சிறியகுட்டைபோல் தேங்கி கிடக்கும் நீரில் கழிவுநீரும் கலக்கிறது. இருப்பினும் வேறுவழியின்றி அத்தண்ணீரையும் தனது பயன்பாட்டு பிடித்து செல்லும் அவலமும் நிகழ்ந்து வருகிறது.

Tags : area ,Marmara , The famine, the famine, the famine
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு