×

13 ஆண்டுகளாக திட்டப்பணிகள் நடைபெறவில்லை நாகர்கோவில் சந்திப்பு ரயில் முனைய விரிவாக்க திட்டம் முடக்கம்

நாகர்கோவில்: ஆண்டொன்றுக்கு ரூ50 கோடி வருமானம் உள்ள என்எஸ்-3 பிரிவு ரயில்நிலையம் நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையம் ஆகும். முனைய ரயில் நிலையமாக இருப்பதால் நாகர்கோவிலை மையமாக வைத்து பல்வேறு இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து சென்னை, கோவை, மும்பை, பெங்களூர், மங்களூருக்கு தினசரி ரயில்களும், ராமேஸ்வரத்துக்கு வாரத்திற்கு மூன்று நாள் ரயிலும், புதுடில்லிக்கு வாரத்திற்கு இரண்டு நாள் ரயிலும், திப்ரூகார், சென்னை, புதுச்சேரி, ஷாலிமார், காந்திதாம், ஹவுரா போன்ற இடங்களுக்கும் வாராந்திர ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர திருவனந்தபுரம், புனலூர், கோவை, திருநெல்வேலி, கோட்டயம், மதுரை, கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது.

தற்போது உள்ள நான்கு நடைமேடைகளில் நடைமேடை 1ஏ திருவனந்தபுரம் மார்க்கம் செல்லும் ரயில்களை மட்டுமே நிறுத்திவைக்க முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்படும் நெடுந்தூர ரயில்களும் அங்கு பராமரிப்பு வசதி இல்லாத காரணத்தால் நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு காலியாக கொண்டு வந்து இங்கு வைத்தே பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது. இங்கிருந்து இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாகர்கோவில் பணிமனைக்கு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்க சுமார் 500 ரயில் பெட்டிகள் உள்ளது. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போதிய நடைமேடைகள் இல்லாததால் நாகர்கோவிலுக்கு வரும் ரயில்கள் ரயில்நிலையத்திற்கு வெளியே சிக்னல் கிடைக்காததால் சுமார் ஒரு மணி நேரம் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. திருநெல்வேலி மார்க்கத்திலிருந்து நாகர்கோவிலுக்கு வரும் ரயில்கள் நடைமேடை காலியாக இல்லாததால் தோவாளை ரயில் நிலையம் கடந்ததும் அவுட்டர் சிக்னலில் நிறுத்தி வைக்கப்பட்டு,

நடைமேடை காலியான பிறகே அந்த ரயில்கள் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் குழித்துறை, இரணியல் ரயில்நிலையங்களில் இறங்க வேண்டிய பயணிகள் இணைப்பு ரயிலாக எந்த ஒரு ரயிலிலும் பயணிக்க முடியாதநிலை உள்ளது. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிலவும் இடநெருக்கடியை போக்க வேண்டி கோயம்யுத்தூரிலிருந்து நாகர்கோவிலுக்கு வந்து சேரும் சூப்பர்பாஸ்ட் ரயிலின் ரயில் பெட்டிகளை கொண்டு 56310 நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து சென்னை, புதுச்சேரி, காரைக்கால், மேட்டுபாளையம், மங்களூர் ஆகிய இடங்களுக்கு புதிதாக இரவு நேர ரயில்கள் இயக்க வேண்டும். இது மட்டுமில்லாமல் கன்னியாகுமரி - புதுடில்லி தினசரி ரயில், கன்னியாகுமரி - ஹவுரா தினசரி ரயில், நாகர்கோவில் - மும்பை தினசரி ரயில், கன்னியாகுமரி ஐதராபாத் தினசரி ரயில் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில்கள் இயக்க வேண்டுமானால் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பகலில் இந்த ரயில்களின் காலிபெட்டிகளை நிறுத்தி வைப்பதற்கு ஸ்டேபளிங் லைன்கள் அதிக அளவில் தேவைப்படுகிறது. தற்போது நாகர்கோவில் - பெங்களுர் இரவுநேர ரயில்களின் காலி பெட்டிகளை பகலில் நிறுத்திவைக்க ஒரு சில நாட்களில் இடநெருக்கடி ஏற்படுகிறது. இவ்வாறு காலிபெட்டிகளை நிறுத்தி வைக்க இடம் இல்லாத காரணத்தால் நடைமேடைகளில் அதிக நேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இடநெருக்கடியால் இன்டர்சிட்டி மற்றும் பல வாராந்திர ரயில்கள் நாகர்கோவில் டவுண் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு நடைபெற்ற ரயில்வே பட்ஜெட் விவாதத்திற்கு பதிலளித்து பேசிய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா ‘கன்னியாகுமரி ரயில் நிலையம் முனைய ரயில் நிலையமாகவும், நாகர்கோவில் ரயில் நிலைய முனைய வசதி விரிவாக்கம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில்களை பராமரிப்பு செய்வதற்கு கூடுதலாக மூன்று பிட்லைன்களும், பராமரிப்பு செய்த காலி ரயில் பெட்டிகளை நிறுத்திவைப்பதற்கு ஒன்பது ஸ்டேபளிங்லைன்களும். இரண்டு நடைமேடைகளும் அமைக்கப்படும் என்று மாஸ்டர் பிளான் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் சிக் லைன் பணிமனை விரிவாக்கம், தற்போதைய பிட்லைன்களின் நீளத்தை அதிகரித்தல், ரயில்பெட்டிகள் பராமரிப்புக்கு என புதிய கட்டிடங்கள் கட்டுதல், கழிவு நீரை மறுசுழற்சி மூலமாக சுத்திகரிக்கும் ஆலை ஆகியவை அமைக்கப்படுகிறது. இதைப்போல் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் முனைய விரிவாக்கம் திட்டம் நாகர்கோவில் - மணியாச்சி இருவழிபாதை திட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ளது. இதன்படி இந்த திட்டம் 2015-16-ம் ஆண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த திட்டத்தில் இதுவரை எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

நாகர்கோவில் ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய 2006-07 ம் ஆண்டு ஏற்கனவே ஒப்புதல் பெறப்பட்ட இரண்டாம் கட்ட பணிகளும் இதுவரை துவங்கப்பட வில்லை. இரண்டாவது கட்ட பணிகளில் இரண்டு 24 பெட்டிகள் கொண்ட புதிய நடைமேடைகள், ஆறு புதிய ஸ்டேபளிங் லைன்கள், புதிய பிட்லைன்கள் அமைத்தல், தற்போது உள்ள பிட்லைன்கள் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் ஆகிய பணிகளை உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் இது வரை நிதி பற்றாக்குறை நிலம் ஆர்ஜிதம் பிரச்னை என பல்வேறு காரணங்களாக சுமார் நான்கு வருடங்களாக எந்த ஒரு பணியும் செய்யப்படவில்லை. எனவே நாகர்கோவில் ஜங்ஷன் முனைய விரிவாக்க பணிகளை உடனே துவக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாகர்கோவிலா? நேமமா?
நாகர்கோவில் முனைய விரிவாக்க திட்டத்தை நாகர்கோவில் - மதுரை இரட்டை ரயில்பாதை பணிகளை மேற்கொள்ளும் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஆர்.வி.என்.எல் நிறுவனம் மேற்கொள்ள இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களுக்காக இந்த பணிகளை தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டம் அல்லது தெற்கு ரயில்வேயின் கட்டுமான நிறுவனம் செய்யும் என்று தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் அருகில் உள்ள நேமம் முனைய திட்ட பணிகளை இந்த நிறுவனம்தான் செய்கிறது. இவ்வாறு செய்வதால் இங்கு உள்ள நிதியை அங்கு மாற்றிவிடவும், இங்கு செய்ய வேண்டிய பணிகளை அங்கு செய்யவும் வாய்ப்பு உள்ளது.

கோட்டம் மாற்றமே நிரந்தர தீர்வு
இது தொடர்பாக ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறியதாவது: நாகர்கோவில் ரயில் நிலைய விரிவாக்க பணிகள் முடிக்கப்பட்டுவிட்டால் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியிலிருந்து மதுரை, சென்னை வழியாக இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கு ரயில்கள் அறிவிக்கப்பட்டு இயக்கப்படும். இது மட்டுமில்லாமல் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொச்சுவேளி, மதுரை, திருச்சி, சென்னை போன்ற இடங்களிலிருந்து இயக்கப்பட்டு வரும் ரயில்கள் குமரிக்கு நீட்டிப்பு செய்ய வசதி வாய்ப்புகள் கிடைக்கும். இதற்கு குமரி மாவட்ட ரயில்வே வழித்தடங்களை உடனடியாக மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். கொல்லம் - புனலூர் - செங்கோட்டை பாதை அகல பாதையை திருவனந்தபுரம் கோட்டத்ததுடன் இணைத்துவிட்டு குமரி மாவட்ட பகுதிகளை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். இவ்வாறு இணைப்பதால் இரண்டு கோட்டத்துக்கும் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Nargarko Junction Rail Terminal Expansion Scheme , Project, Nagercoil Junction, Freezing
× RELATED 13 ஆண்டுகளாக திட்டப்பணிகள்...