×

பிறந்த நாளன்று மரக்கன்று நட்டு பராமரிப்பு: கடும் வறட்சியிலும் பள்ளி வளாகத்தை பசுஞ்சோலையாக மாற்றிய மாணவர்கள்... அறிவியல் ஆசிரியர் துணையுடன் சாதனை

தர்மபுரி: தர்மபுரியில் கடும் வறட்சியிலும், பாலவாடி அரசு பள்ளி வளாகத்தை பசுஞ்சோலையாக மாற்றி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே பாலாவாடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில், ஒ.ஜி.அள்ளி, காரப்பட்டு, குரம்பட்டி, சவுளூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று வரும் இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சிவமூர்த்தி, அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சங்கர் உள்ளிட்ட 9 ஆசிரியர்கள் மற்றும் 3 அலுவலக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மொத்தம் 4.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பள்ளியில், 2 ஏக்கரில் மரங்கள் வளர்த்து பசுமையாக காட்சியளிக்கிறது. வெளியில் இருந்து பள்ளிக்குள் செல்லும் போது, ஏதோ பசுஞ்சோலைக்குள் செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பள்ளி வளாகத்தில், அரசமரம், ஆலமரம், வேப்பமரம், பூவரசு, நாவல், பாதாம், புங்கன், கருங்காலி, தேக்கு, கொன்றை, மலைவேம்பு உள்ளிட்ட 508 வகையான மரங்களை நட்டு, ஆசிரியர் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் தண்ணீரை விலைக்கு வாங்கி, மாணவர்கள் பராமரித்து வருகின்றனர்.

பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நர்சரி பண்ணையில், மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிறந்த நாளன்று, பள்ளி வளாகத்தில் நடப்படுகிறது. விடுமுறை நாட்களில் கூட பள்ளிக்கு வந்து மரக்கன்றுகளுக்கு மாணவர்கள் தண்ணீர் ஊற்றி செல்கின்றனர். இப்பள்ளியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர்கள் திருமுருகன், அரிஹரன் ஆகியோர் தங்கள் வீடுகளில் தலா 100 மரக்கன்றுகள் வளர்த்து வருகின்றனர். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சங்கர் தலைமையில் பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைத்து அமைத்துள்ள குழுவினர், தினசரி மரக்கன்றுகளை கண்காணித்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பாதுகாத்து வருகின்றனர். பள்ளியிலேயே கடப்பாரை, மண்வெட்டி, தண்ணீர் ஊற்றும் கேன்கள், பிளாஸ்டிக் தண்ணீர் குழாய்கள் உள்ளிட்டவற்றை இக்குழுவினர் வாங்கி வைத்துள்ளனர். மேலும், இப்பள்ளியில் உள்ள பசுமை குடிலில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட செடிகள் விதை போட்டு வளர்க்கப்படுகிறது. திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி இடங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் இந்த பசுமை பள்ளியை நேரில் பார்வையிட்டு செல்கின்றனர்.

இதுகுறித்து அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சங்கர் கூறுகையில், ‘எங்கள் பள்ளியில் உள்ள 2 போர்வெல்களிலும் தண்ணீர் இல்லை. இதனால், தண்ணீர் கிடைக்காமல் விலைக்கு வாங்கி மரச்செடிகளை காப்பாற்றி வருகிறோம். பள்ளி வளாகத்தில் உள்ள 2 போர்வேல்களையும் ஆழப்படுத்தி தரவேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக மரச்செடிகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகிறோம். என்னை விட மாணவ, மாணவிகள் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளனர். இதனால், எங்கள் பள்ளி வளாகத்திற்குள் வந்தால் வெயிலின் தாக்கமே தெரியாது. மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு, தங்கள் வீடுகளில் நர்சரி பண்ணை அமைத்து மரச்செடிகள் வளர்த்து கொண்டு வந்து நடுகின்றனர். மரங்கள் அதிகம் வளர்க்கப்படுவதால் ஆக்ஸிஜன் அதிகமாக கிடைக்கும். தமிழக அரசு தூய்மை பள்ளியாகவும், அரிமா சங்கம் பசுமை பள்ளியாகவும் தேர்வு செய்து விருது வழங்கியுள்ளது,’ என்றார்.

Tags : Births ,Green Drought ,School Campus , Sorghum, heavy drought, school
× RELATED சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு...