×

வறண்டது புழல் ஏரி - குடிநீர் எடுக்கும் பணி நிறுத்தம்

சென்னை: சென்னையை அடுத்த புழல் ஏரி முற்றிலும் வறண்டதால் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று வரை புழலில் இருந்து 6 கன அடி தண்ணீர் உறிஞ்சப்பட்டு வந்த நிலையில் ஏரி முற்றிலும் வறண்டதால் பணி நிறுத்தப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் ஏற்கனவே வறண்ட நிலையில் புழல் ஏரியும் வறண்டது. புழலில் இருந்து சென்னைக்கு ஓரளவு குடிநீர் விநியோகிக்கப்பட்ட நிலையில் தற்போது முற்றிலும் தடைபடும் சூழல் உருவாகி உள்ளது.

சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதாக புகார் தெரிவித்துள்ள பொதுமக்கள் நள்ளிரவிலும் குடிநீருக்காக பல மணி நேரம் காத்து நிற்க வேண்டியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். சென்னையில் கோடை காரணமாகவும், போதிய மழை பெய்யாததாலும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய முக்கிய ஏரிகள் போதிய தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இரவில் தண்ணீர் தேடி அலைய வேண்டியுள்ளதால் பகலில் வேலைக்கு செல்ல முடியவில்லை என்றும், அன்றாட பணிகளை சரிவர செய்ய முடிவதில்லை என்றும் மக்கள் குமுறுகிறார்கள். சென்னையில் ஆண்டு தோறும் ஏற்படும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நிரந்தரமாக ஒரு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : lake , Puzhal lake, drinking water
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...