×

சென்னையில் அடுத்தடுத்து நடக்கும் ஆபத்தான விளையாட்டு அத்துமீறும் பைக் ேரசர்கள்; வேடிக்கை பார்க்கும் போலீசார்: உயிர்பலி அதிகரிப்பதால் பொதுமக்கள் குமுறல்

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இளைஞர்கள் சிலர் ஆபத்தை உணராமல் பைக் ரேஸில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு பைக் ரேஸில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் குறிப்பாக இரவு நேரங்களில் தங்களது பந்தய திட்டத்தை வகுக்கின்றனர். சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலை, மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை சாலை என சென்னையின் பல்வேறு முக்கிய சாலைகளில் பைக் ரேஸ்கள் அதிகளவில் நடந்து வருகிறது. இவர்கள் ரேசில் ஈடுபடும் போது, சாலைகளில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மற்ற வாகன ஓட்டிகளுக்கு மனதளவில் வருத்தங்கள் இருந்தாலும், அதிகமான உயிர் சேதம் என்னவோ பைக் ரேஸர்களுக்குத்தான். இது தெரியாமல் தலைகால் புரியாமல் ஆடுகின்றனர் இந்த 20 வயதை நெருங்காத விடலைகள்.

சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை பைக் ரேஸ் என்பது பல விதங்களாக நடத்தப்படுகிறது. ஸ்டண்ட் எனப்படும் பைக் சாகசங்கள், பாயிண்ட் டூ பாயிண்ட் எனப்படும் சிக்னல் டு சிக்னல் ரேஸ், போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாக உள்ள சாலைகளில் விதிகளை மீறி பைக் ஓட்டுவது, கிழக்கு கடற்கரை சாலையில் ஓட்டப்படும் அதிவேக ரேஸ், என பல வகையான ரேஸ்களில் ஈடுபடுகின்றனர். இதில் வாலிபர்கள் சிக்கி அழிந்து வருகின்றனர். ஸ்டண்ட் எனப்படும் பைக் சாகசங்கள்: சென்னையின் முக்கிய சுற்றுலாதளங்களும், பொழுதுபோக்கு இடங்களுமான மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் நடத்தப்படுகிறது. ஏனென்றால் அப்போது தான் அங்கிருப்பவர்கள் கூடி நின்று ரசிப்பார்கள், ஆரவாரம் செய்வார்கள் என்று. ஆனால் இளைஞர்கள் மட்டுமே இது போன்ற பைக் சாகசங்களை வரவேற்று வேடிக்கை பார்க்கின்றனர். குடும்பத்தோடு வருபவர்கள் யாரும் இதனை ரசிப்பதில்லை.

மேலும் பைக் ஸ்டண்டில் ஈடுபடும் வாலிபர்கள் அடிப்பட்டு அவதியடைந்தால், வேடிக்கை பார்பவர்கள் யாரும் காப்பாற்ற முன்வருவதில்லை, உதவுவதுமில்லை. அதை ஒரு தண்டனையாகத்தான் பொதுமக்கள் கருதுகின்றனர். சிக்னல் டூ சிக்னல் ரேஸ்: இந்த சிக்னல் டூ சிக்னல் ரேஸ், சென்னையின் ஒரு சிக்னலில் இருந்து குறிப்பிட்ட கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு சிக்னல் வரை நடத்தப்படுகிறது. இதில் முதலில் செல்பவர் தான் வெற்றியாளர். முழுக்க முழுக்க பல லட்சம் பணத்திற்காக தான் நடத்தப்படுகிறது. ஒரு சிலர் தோல்வியடைந்தால் பைக் வெற்றியாளருக்கு என்ற அடிப்படையில் ரேசில் ஈடுபடுகின்றனர். இந்த ரேசின் போது கால் கிழே வைக்காமல் இலக்கை அடைய வேண்டும். அப்படி தரையை தொட்டால் அவுட். இந்த ரேசில் தான் அதிக விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

அதிவேக ரேஸ்: இந்த ரேஸ் பெரும்பாலும் சென்னை கிழக்குக்கடற்கரை சாலையில் மாமல்லபுரம் வரை நடத்தப்படுகிறது. இதில் 650 சிசி கொண்ட அதிவேகமாக ஓடக்கூடிய வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பைக்குகள் வைத்திருபவர்கள் தான் கலந்துகொள்கின்றனர். இந்த பந்தையம் பல லட்சங்களுக்கு நடத்தப்படுகிறது. பெரும்பாலும் பணக்காரர்கள், முக்கிய புள்ளிகளின் பிள்ளைகள் தான் கலந்து கொள்கின்றனர். வார இறுதிநாட்களில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை நடைபெறும் இந்த ரேசில், மற்ற வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பறப்பது பணக்கார வீட்டு பைக்குகள் என்பதால் போலீசார் இதை கண்டுகொள்வதில்லை. புகார் அளித்தாலும் எந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. போக்குவரத்து நெரிசலில் ரேஸ்: இந்த ரேஸ் மிகவும் திரில்லானது. போக்குவரத்து  நெரிசல் உள்ள சாலையில், இந்த ரேஸ் நடத்தப்படுகிறது. இந்த ரேஸின் போது, ரேஸர்கள் சிக்னல், பக்கத்தில் செல்பவர் வயதானவர், குழந்தையுடன் செல்பவர், கர்ப்பிணி மனைவியை ஏற்றி செல்பவர், புதியதாக கார் ஓட்ட பழகுபவர், வேலைக்கு சென்று வரும் பெண் என யாரையும் பார்ப்பதில்லை.

அனைத்து விதிகளையும் மீறி ஓடி பிடிக்க முடியாமல், அடுத்த எல்லைகளில் இருக்கும் போலீசாருக்கு தகவல் கொடுத்து பிடிக்க முடியாமல் வசூலில் இருக்கும் போலீஸ்கள் என யாரையும் பொருட்படுத்தாமல் பறந்து செல்வதுதான் போக்குவரத்து நெரிசலில் ரேஸ். குறிப்பிட்ட வேகத்தை குறைத்து சென்றால் அவுட்.  இதனை தொடர்ந்து சென்னை மாநகர போலீசார் தொடர்ந்து தீவிர சோதனை நடத்தினர். முக்கியமாக ரேஸ் வாலிபர்கள் சந்திக்கும் இடமான மெரினா கடற்கரையில் சோதனை நடத்தினர். அதில், 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக 877 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில் ஆபத்தான வகையில் பைக் ரேஸ் ஓட்டியதாக 286 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ச்சியாக பைக் ரேஸ் குறித்து விசாரணை நடத்திய போது, அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் பல வெளியாகின. வாலிபர்கள் தனியாக வாட்ஸ் ஆப் குழு உருவாக்கியும், அந்த குழுக்களில் 5 கிலோமீட்டருக்கு குறிப்பிட்ட தொகையும், அதற்கு மேல் செல்லக்கூடிய தொலைவுகளுக்கு ₹10 ஆயிரம் முதல் ₹1 லட்சம் வரை பந்தயம் வைத்து விளையாடி வருகின்றனர்.

இவர்களை கைது செய்ய போலீசார் அதிக அக்கறை காட்டுவதில்லை ஏனென்றால் அரசியல் செல்வாக்கு பலத்தில் தப்பி விடுகின்றனர். ஏதேனும் உயிர் இழப்பு நடந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, ரேஸ் ஓட்டுபவர்கள் யார், என்று போலீசாருக்கு தெரியும். போலீசார் அவர்களை பிடிப்பதில்லை, பிடிக்கவும் முடிவதில்லை. பின்னர் எப்படி இவர்கள் மற்ற சட்ட ஒழுங்கு பிரச்னையில் நடவடிக்கை எடுப்பார்கள். போலீசார் நினைத்தால் பைக் ரேசை உடனடியாக நிறுத்த முடியும், சிசிடிவி பதிவுகளை வைத்து அனைவரையும் பிடித்து நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் ஏனோ அதனை செய்ய தவறுகின்றனர். சாதாரண பைக் ேரஸர்களை பிடிக்க முடியாத காவலர்கள் எப்படி பெரும் குற்றவாளிகளை பிடிப்பார்கள் என்று தெரியவில்லை. குற்றவாளிகளுடன் கூட்டு வைத்து கொண்டனரா என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு கூறினர்.

* கடந்த 29ம் தேதி மெரினா உழைப்பாளர்  சிலையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் நோக்கி 11  இருசக்கர வாகனங்களில் வாலிபர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர். 11 பைக்கையும் பறிமுதல் செய்த போலீசார் வாலிபர்களின் பெற்றோர்களை அழைத்து எச்சரித்து அனுப்பினர்.
* கடந்த 2ம் தேதி அதிகாலை சென்னை  பட்டாளத்தை சேர்ந்த பாலாஜி, சாந்தகுமார் உள்ளிட்ட 8 பேர் 4 பைக்களில்  பெசன்ட் நகர் நோக்கி பைக் ரேசில் ஈடுபட்டனர். இதில் மெரினா அருகே பேருந்தில் பைக் மோதி சாந்தகுமார் என்ற 19 வயது மாணவர் உயிரிழந்தார்.

2.50 லட்சம் சிசிடிவி இருந்தும் வேஸ்ட்
சென்னையில் 2.50 லட்சம் சிசிடிவி கேமராக்கள் 12 காவல் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எதுவும் சரியாக செயல்படவில்லை. மூன்றாம் கண் என்று அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் குருடாகத்தான் உள்ளது. கொள்ளையர்கள் தற்போது கேமராக்கள் செயல்படாத பகுதிகளை கண்காணித்து நோட்டமிட்டு கைவரிசை காட்டி வருகின்றனர். இதே போல் பல இடங்களில் வீடு புகுந்து அடிக்கப்பட்ட கொள்ளை சம்பவம், வழிப்பறி சம்பவங்களில் சிசிடிவி கேமராவில் குற்றவாளி அடையாளம் காணப்பட்டும் அவர்களை கைது செய்ய முடியாத நிலையில் தான் தற்போது மாநகர காவல்துறை உள்ளது.

போலீசாரே கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவல்லிக்கேணியில் வியாபாரியை மிரட்டி ₹80 ஆயிரம் லஞ்சம் பெற்றது. அசோக் நகர் காவல்நிலையத்தில் உள்ள போலீசார் கொள்ளை வழக்கில் தொடர்பு வைத்துக்கொண்டு கொள்ளை அடித்தது. இன்ஸ்பெக்டர் மீது சக காவலர்கள் புகார் அளித்தது என காவல்துறையில் பல குளறுபடிகள் நடந்து வருகின்றது.

10 சதவீதம் குறைவான வழக்குகள் மட்டுமே பதிவு
கடந்த 2018ம் ஆண்டு 24 லட்சத்து 47 ஆயிரத்து 329 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019 மே மாதம் வரை 7 லட்சத்து 88 ஆயிரத்து 563 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 10 சதவீதத்திற்கும் குறைவான வழக்குகள் மட்டுமே பைக் ரேஸில் ஈடுபடுவோர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. பைக் ரேஸில் ஈடுபடுவோரால் உயிர் சேதம் ஏற்பட்டால் மட்டும் தான் போலீசார் பைக் ேரஸர்களை பிடிக்கின்றனர். அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : game ,Chennai , Chennai, bike racers, police
× RELATED வெற்றியை தொடருமா ராஜஸ்தான்? குஜராத்துடன் இன்று மோதல்