×

ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் அரசில் 25 அமைச்சர்கள் பதவியேற்றனர்: நடிகை ரோஜாவுக்கு பதவி வழங்க மறுப்பு

திருமலை: ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அவருக்கு சபாநாயகர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 151 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து, ஆந்திர முதல்வராக கடந்த 30ம் தேதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மட்டும் பதவியேற்றார். அமைச்சர்கள் யாரும் அவருடன் பதவியேற்கவில்லை.  இந்நிலையில், அவரது அமைச்சரவையில் பங்கேற்கும் 25 அமைச்சர்களின் பெயர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அப்போது அவர்களுக்கான இலாகாக்களும் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, நேற்று இவர்கள் பதவியேற்றனர்.

அவர்களுக்கு ஆளுநர் நரசிம்மன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இவர்களுடன் ஜாதி வாரியாக ஜெகன் நியமித்த ஐந்து துணை முதல்வர்களும் பதவியேற்றனர்.
நேற்று பதவியேற்ற 25 அமைச்சர்களின் பெயர்களும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகா (அடைப்புக்குள்) விவரமும் வருமாறு: தர்மன்ன கிருஷ்ணதாஸ் (சாலை, கட்டிடத்துறை), மேக்கப்பாட்டி கவுதம் ரெட்டி (தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத்துறை), அனில் குமார் யாதவ் (நீர்ப்பாசனத் துறை), பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டி (பஞ்சாயத்து ராஜ், கிராமிய வளர்ச்சி மற்றும் சுரங்கத்துறை), சங்கரநாராயணா (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை), புக்கண்ண ராஜேந்திரநாத் (நிதித்துறை), கும்மனூரு ஜெயராம் (தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை), சத்திய நாராயணா (மாநகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை), சீனிவாசராவ் (சுற்றுலா, கலாசாரத் துறை),

கண்ணாபாபு (விவசாயம், கூட்டுறவுத்துறை), விஸ்வரூப் பினிபி (சமூக நலத்துறை), ரங்கநாதராஜூ (வீட்டு வசதித்துறை), வனிதா (பெண்கள், குழந்தைகள் நலத்துறை), வெங்கடேஸ்வர ராவ் (சிவில் சப்ளை, நுகர்வோர் துறை), வெங்கடராமய்யா (போக்குவரத்து துறை), சீனிவாசராவ் (அறநிலையத் துறை), சுக்கரிதா (உள்துறை), வெங்கடரமணா (கால்நடை, மீனவத்துறை), சுரேஷ் (கல்வித்துறை)
பதவியேற்ற 25 அமைச்சர்களும், 5 துணை முதல்வர்களும் நேற்று பகல் 11.30 மணியளவில் அமராவதியில் உள்ள  தலைமை செயலகத்திற்கு சென்று பொறுப்பேற்று கொண்டனர். மேலும், ஜாதிகளின் அடிப்படையில் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்ட 5 பேரும் பொறுப்பேற்றனர்.  

மலைவாழ் மக்கள் பிரிவு துணை முதல்வர் மற்றும் மலைவாழ் மக்கள் நலத் துறை அமைச்சராக பாமுல புஷ்ப வாணி, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு துணை முதல்வர், வருவாய் மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக பில்லி சுபாஷ் சந்திரபோஸ், காப்பு பிரிவு துணை முதல்வர், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை, மருத்துவப் படிப்பு அமைச்சராக ஆள நானி, தாழ்த்தப்பட்டோர் பிரிவு துணை முதல்வர், கலால் மற்றும் வணிகவரித் துறை அமைச்சராக நாராயணசாமி,  முஸ்லிம் சிறுபான்மை பிரிவு துணை முதல்வர், சிறுபான்மை நலவாழ்வுத்துறை அமைச்சராக அம்ஜத் பாஷா ஆகிய 5 பேர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.  தற்காலிக சபாநாயகராக தம்மினேனி சீதாராம் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், அவர் புதிய எம்எல்ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமை செயலகத்திற்கு முதன்முறையாக சென்றார். அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

தொடர்ந்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடந்தது.  இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் வெற்றிபெற்ற 14 பெண் எம்எல்ஏக்களில் நடிகை ரோஜாவும் ஒருவர். அவருக்கு துணை முதல்வர் அல்லது அமைச்சர் பதவி   கிடைக்கும் என பரவலாக பேசப்பட்டது. ஆனால், அமைச்சரவை பட்டியலில் ரோஜா  பெயர் இடம்பெறவில்லை. அமைச்சர் பதவி இரண்டரை ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்கும் எனவும் மீண்டும்  இரண்டரை ஆண்டுகளுக்கு பின் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் நேற்று நடந்த  எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெளிப்படையாக அறிவித்து விட்டார் அதன்படி 2வது அமைச்சரவையில் ரோஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ரோஜாவுக்கு விரைவில் சபாநாயகர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஒய்எஸ்ஆர் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Tags : ministers ,Jagan Mohan , chief minister Jagan Mohan ,Andhra Pradesh,Actress Roja
× RELATED பட்டா பெறுவதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட...