×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பைனலில் டொமினிக் தீம்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, ஆஸ்திரியா வீரர் டொமினிக் தீம் தொடர்ந்து 2வது ஆண்டாக தகுதி பெற்றார். ரோலண்ட் கேரோசில் நேற்று முன்தினம் தொடங்கிய பரபரப்பான 2வது அரை இறுதியில் உலகின் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் - டொமினிக் தீம் (4வது ரேங்க்) மோதினர். முதல் செட்டில் அதிரடியாக விளையாடி ஜோகோவிச்சின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த தீம் 6-2 என வென்று முன்னிலை பெற்றாஎ. இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த ஜோகோவிச் 6-3 என கைப்பற்றி பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது, மூன்றாவது செட்டில் டொமினிக் தீம் 3-1 என முன்னிலை வகித்தபோது புழுதிப் புயல் மற்றும் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இரண்டாவது நாளாக நேற்று தொடர்ந்து நடந்த இப்போட்டியில் 7-5 என 3வது செட்டை கைப்பற்றிய தீம் மீண்டும் முன்னிலை பெற்றார். எனினும், அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி 7-5 என 4வது செட்டை ஜோகோவிச் வசப்படுத்து 2-2 என சமநிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. தொடர்ச்சியாக் புள்ளிகளைக் குவித்த தீம் 4-1 என முன்னேறியதால் எளிதாக வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. 5-3 என்ற முன்னிலையுடன் 2 மேட்ச் பாயின்ட்கள் கை வசம் இருந்த நிலையில், தேவையின்றி பதற்றத்துடன் விளையாடி 4 தவறுகளை செய்ததால் ஜோகோவிச்சுக்கு நம்பிக்கை துளிர்த்தது. எனினும், உறுதியுடன் விளையாடிய தீம் 6-2, 3-6, 7-5, 5-7, 7-5 என 5 செட்களில் 4 மணி, 13 நிமிடம் போராடி வென்று தொடர்ந்து 2வது முறையாக பிரெஞ்ச் ஓபன் பைனலுக்கு முன்னேறினார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் தொடர்ச்சியாக 26 வீரர்களை வீழ்த்தியிருந்த ஜோகோவிச்சின் வெற்றிநடைக்கு தீம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பரபரப்பான இறுதிப் போட்டியில் அவர் நடப்பு சாம்பியன் ரபேல் நடாலை (ஸ்பெயின்) எதிர்கொள்கிறார். கடந்த ஆண்டு பைனலிலும் நடாலுடன் மோதிய தீம் 4-6, 3-6, 2-6 என நேர் செட்களில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.


Tags : Dominic ,French Open , French Open Tennis, Dominic Theme
× RELATED சென்னை ஓபன் சேலஞ்சர் அரையிறுதில் சுமித் நாகல்