×

முதல் முறையாக அறிமுகம் 39 ரயில்களில் பயணிகளுக்கு மசாஜ் வசதி: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

புதுடெல்லி: நாட்டிலேயே முதல் முறையாக ஓடும் ரயிலில் பயணிகளுக்கு மசாஜ் செய்யும் வசதியை ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. முதல் கட்டமாக, இந்தூரில் இருந்து புறப்படும் 39 ரயில்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. டேராடூன் - இந்தூர் எக்ஸ்பிரஸ், புதுடெல்லி - இந்தூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், இந்தூர் - அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய பிரதான எக்ஸ்பிரஸ் ரயில்களும், இந்த 39 ரயில்களில் அடங்கும். ரயில்களில் மசாஜ் செய்யும் வசதி அடுத்த 15 முதல் 20 நாட்களில் அமலுக்கு வந்துவிடும். தலை, கால்களில் மசாஜ் செய்வதற்கு ரூ.100 முதல் ரூ. 300 வரை கட்டணம் வசூலிக்கப்படும். ரயில்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் இந்த வசதி கிடைக்கும். ஒவ்வொரு ரயிலிலும் குறைந்தது 3 முதல் 5 மசாஜ் செய்பவர்கள் பயணம் செய்வார்கள். அவர்களுக்கு ரயில்வே சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்படும். கோல்டு, டைமண்ட் மற்றும் பிளாட்டினம் என்ற மூன்று வகையான பிரிவுகளில் மசாஜ் செய்யப்பட உள்ளது. இதற்காக தனித்தனி கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மேற்கு ரயில்வே மண்டலத்தின் ரத்லம் கோட்டம், இந்த திட்டத்தை அமல்படுத்தலாம் என்று யோசனை தெரிவித்தது. முதல் முறையாக அமல்படுத்தப்படும் இந்த திட்டத்தால் பயணிகள் பயன் பெறுவதோடு, ரயில்வேக்கும் ஆண்டிற்கு கூடுதலாக ரூ.90 லட்சம் வருவாய் கிடைக்கும். பயணிகளுக்கு மசாஜ் செய்யும் 20 ஆயிரம் பேரால், டிக்கெட் வருவாயும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்று ரயில்வே வாரியத்தின் ஊடக மற்றும் தகவல் தொடர்பு துறை இயக்குனர் ராஜேஷ் பாஜ்பாய் தெரிவித்தார். இந்த திட்டத்தை அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் விரிவுப்படுத்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags : Introduction , Massage, railway
× RELATED பெண்களின் உடல்நலத்திற்காக...