வெவ்வேறு சாலை விபத்துகளில் சிறுவன் உள்பட 5 பேர் பலி

அண்ணாநகர்: திருவேற்காடு அன்னை சத்யா நகரை சேர்ந்தவர்கள் விஜய் (17), பரத் (24), சுரேந்தர். இவர்கள் மூவரும் நேற்று அதிகாலை 2 மணிக்கு ஒரே பைக்கில் கோயம்பேடு வந்தனர். பின்னர், அங்கிருந்து மீண்டும் திருவேற்காடு புறப்பட்டனர். அப்போது, அதிவேகமாக வந்த லாரி, பைக் மீது மோதியதால் நிலைதடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனர். அப்போது, லாரியின் சக்கரத்தில் சிக்கி விஜய் பரிதாபமாக இறந்தான். பரத், சுரேந்தர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். தகவலறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து போலீசார், பரத், சுரேந்தர் ஆகியோரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர், விஜய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சுரேந்தர் இறந்தார். போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் திருவேற்காட்டை சேர்ந்த மனோகரன் (40) என்பவரை கைது செய்தனர்.

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த தண்டலம் மணிமேடு அம்பாள் நகரை சேர்ந்தவர் விஜய் (36). இவரது மனைவி மலர். இவர்களுக்கு நிவேதா (8) என்ற மகள் உள்பட 5 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன் விஜய், குடும்பத்துடன் செஞ்சியில் நடந்த திருமண விழாவுக்கு சென்றார். அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு விஜய், தனது மொபெட்டில் மகள் நிவேதாவை முன்னால் நிற்க வைத்துக் கொண்டும், 2 மகன்களை பின்னால் உட்கார வைத்து கொண்டும் சென்னைக்கு புறப்பட்டார். வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, திருமுடிவாக்கம் அருகே மொபட் சென்றபோது, சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த வேன் மீது மொபெட் மோதியது. இதில் நிவேதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள். விஜய்க்கு படுகாயம் ஏற்பட்டது. 2 மகன்கள் தப்பினர். பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும், விஜய்யை சிகிச்சைக்காகவும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜய் நேற்று காலை இறந்தார்.

* செம்மஞ்சேரியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது நண்பர் அவினாஸ் (23). நேற்று முன்தினம் இரவு இருவரும், பைக்கில் செம்மஞ்சேரி பெருமாள் கோயில் அருகே சென்றபோது சாலையோர தடுப்பில் பைக் மோதி, அவினாஸ் இறந்தார். தர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : road accidents , Accident
× RELATED அதிபர் ட்ரம்புக்கு அளிக்கப்படும் விருந்தில் முதல்வர் பழனிசாமி?