×

கேரளாவில் மேலும் 3 பேருக்கு நிபா பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 3 பேர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் எர்ணாகுளம் தனியார் மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நலம் தேறி வருவதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார். நிபா பாதித்த அந்த கல்லூரி மாணவருடன் பழகிய 311 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் இவர்களில் தொடுபுழாவை சேர்ந்த ஒருவருக்கு காய்ச்சலும், மயக்கமும் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோல இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியை சேர்ந்த 80 வயது முதியவருக்கும், பரவூரை சேர்ந்த ஒருவருக்கும் நிபா அறிகுறி தென்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் எர்ணாகுளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிபாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் கல்லூரி மாணவரின் வீடு உள்ள பரவூர், அதை சுற்றியுள்ள பகுதிகளில் பூனாவில் உள்ள நுண்ணியிரி ஆய்வக வல்லுநர்கள், டாக்டர்கள் ஆய்வு நடத்தினர். அப்பகுதியில் பழம் தின்னி வவ்வால்களை பிடித்தும் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : Nifa ,Kerala , Niba impact
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு