×

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பூங்கா அமைக்க தஞ்சையில் 100 ஆண்டுகளாக வசிக்கும் 2,000 வீடுகளை இடிக்க திட்டம்: போலீசார், எம்எல்ஏ பேச்சுவார்த்தை

தஞ்சை: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை மாநகராட்சியில் பணிகள் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு கீழ அலங்கத்தில் 2 ஆயிரம் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இன்று வரை அந்த இடத்தில் எந்த பணியும் நடக்கவில்லை. மைதானம் போல கிடக்கிறது. இப்போது அடுத்த கட்டமாக 19-வது வார்டுக்கு உட்பட்ட மேல அலங்கம், செக்கடி ஆகிய பகுதிகளில் 2 ஆயிரம் வீடுகளை இடித்து பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நேற்றுமுன்தினம் மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாக சென்று உங்களுக்கு பட்டா இருக்கிறதா என கேட்டு உள்ளனர். இங்கு வசிக்கும் யாருக்கும் வீட்டுமனை பட்டா இல்லை. ஆனால் இவர்கள் 100 வருடத்திற்கும் மேலாக வசித்து வருகிறார்கள். இதையடுத்து, மாநகராட்சிக்கான பட்டா இல்லாததால் வீடுகளை காலி செய்யுங்கள் பூங்கா அமைக்க போகிறோம் என கூறி உள்ளனர். இதைக்கேட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நேற்று காலை எதிர்ப்பு தெரிவித்து மறியல் செய்ய திரண்டனர். தகவல் அறிந்ததும் தஞ்சை மேற்கு போலீசார், எம்.எல்.ஏ. நீலமேகம் வந்து அவர்களை சமாதானம் செய்தனர். ஆனால் மக்கள் ஆவேசத்துடன் தங்கள் குறையை கூறினர். இதுகுறித்து மேலஅலங்கம் பாண்டியம்மாள் (55) கூறுகையில், ‘‘எங்கள் தாத்தா காலம் முதல் இங்கு இருக்கிறோம். சிறுக சிறுக சம்பாதித்து இப்போது தான் வீடு கட்டி உள்ளோம். அதை இடித்தால் நாங்கள் எங்கே போவோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக நகரம் அழகுபடுத்தப்பட வேண்டியதுதான். அதற்காக 100 வருடமாக குடியிருக்கும் மக்களை இப்படி அராஜகமாக காலி செய்வது நியாயமா?’ என்று கேட்டார். மக்கள் கொந்தளிப்புடன் உள்ளதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Smart City ,park ,houses ,talks ,MLA , Smart City
× RELATED புதுச்சேரியில் கால்வாயில்...