மின் வாரியத்தில் வெளிமாநிலத்தவர் நியமனம் ஏன்? அமைச்சர் பேட்டி

மொடக்குறிச்சி: ஈரோடு-நாமக்கல் மாவட்டங்களுக்கு இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாசூர்-சோழசிராமணி மின்சார கதவணை பாலம் உள்ளது. இந்த பாலத்தின் சீரமைப்பு பணிகளை மின்சார துறை அமைச்சர் தங்கமணி நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக 5 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. காலியாக இருந்த 375 பொறியாளர்கள் பணியிடம் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி வெளி மாநிலங்களில் இருந்து 36 பேர் புதிதாக பணியில் சேர்ந்துள்ளனர். அவர்கள் இரண்டு ஆண்டுகளில் தமிழ் கற்றுக் கொள்ளவில்லை என்றால் வேலை வாய்ப்பை இழப்பார்கள். இவர்கள் உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி பணியில் சேர்ந்துள்ளதால் இதில் மத்திய, மாநில அரசுகள் தலையிட முடியாது. தமிழகத்தில் தேவையான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் 24 மணி நேரம் கடைகள் திறப்பதால் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க முடியும். இவ்வாறு தங்கமணி கூறினார்.

Tags : e-governor , Thangamani
× RELATED குழந்தைகள் நலக்குழு தலைவர் நியமனம்