முதல்வர் துவக்கும் முன் லேப்டாப் வழங்கும் விழா: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிஇஓ

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட 2017-18ம் கல்வியாண்டு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது. மாவட்டத்தை சேர்ந்த 12 பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்பை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யணன் கலந்து கொண்டார். விழா முடிந்து காரில் ஏற சென்ற அமைச்சருக்கு போன் வந்தது. போனில் பேசிய அமைச்சர் டென்சனான முகத்துடன் ‘அண்ணே அண்ணே’’ என்றார். எதிர்முனையில் போன் துண்டிக்கப்பட்டதும் இறுகிய முகத்துடன் காரில் ஏறிய அமைச்சர், அடுத்து நடக்க இருந்த திருப்புல்லாணி, திருவாடானையில் லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சிகளை ரத்து செய்தார். இதற்கிடையே மாநில பள்ளி கல்வித்துறை சார்பில், ‘‘யாரை கேட்டு லேப்டாப் வழங்கும் விழா நடத்தினீர்கள்’’ என முதன்மை கல்வி அலுவலர் அய்யணனிடம் விளக்கம் கேட்டு உடனடியாக அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மக்களவை தேர்தல் நடந்ததால் லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் முடிந்த நிலையில் முதல்வர் லேப்டாப் வழங்குவதை துவங்கி வைக்காத நிலையில், ராமநாதபுரத்தில் வழங்கியதால் முதன்மை கல்வி அலுவலர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சேலத்தில்: சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தியும் நேற்று முன்தினம் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘ஆளுங்கட்சியினரின் சிபாரிசுகளை ஏற்காததால் கணேசமூர்த்தி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்’’ என்றனர்.

Tags : CEO , Laptop
× RELATED மைக்ரோசாப்ட் தலைமை செயலதிகாரி சத்ய...