×

இலங்கை, துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.71 லட்சம் தங்கம் பறிமுதல்: பாட்டி உட்பட 3 பேர் கைது

சென்னை: இலங்கை மற்றும் துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த ஒரு பாட்டி உட்பட 3 பேரை சுங்கத்துறையினர் கைது செய்தனர். துபாயில் இருந்து எமிரேட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அட்னன் (36). கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சிலிபுரகுமான் (25) இருவரும் சுற்றுலா பயணிகள் விசாவில் துபாய் சென்று விட்டு வந்தனர். கேரளாவை சேர்ந்தவர் சுற்றுலா சென்றுவிட்டு சென்னைக்கு வரவேண்டிய அவசியம் என்ன என்று அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதையடுத்து இருவரின் உடமைகளை சோதனையிட்டனர் அதில் எதுவும் இல்லை.

இருவரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை கலைந்து சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரின் உள்ளாடையில் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இருவரின் உள்ளாடையிலும் மொத்தம் 1,950 கிராம் தங்க கட்டிகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூ.66.5 லட்சம். இதையடுத்து இருவரையும் கைது செய்தனர்இதேபோல் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.இலங்கையை சேர்ந்த சீதாலெட்சுமி (63). சுற்றுலா பயணியாக கொழும்பிலிருந்து சென்னை வந்தார். அவரையும் சுங்க அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். அவரது உடமைகளில் எதுவும் இல்லை. சீதாலெட்சுமியை தனியறைக்கு அழைத்துச் சென்று அவரது பெண் அதிகாரிகள் உதவியுடன் சோதனை செய்ததில் உள் ஆடையில் 159 கிராம் தங்க நகைகள் மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.4.5 லட்சம், சீதாலெட்சுமியையும் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் துபாய், இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.71 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Dubai , Arrested
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...