×

மாநிலங்களவையில் காலியாகும் 3 எம்பி பதவியால் அதிமுகவில் மோதல்

சென்னை: அதிமுகவில் காலியாகவுள்ள 3 மாநிலங்களவை எம்பி பதவியை பிடிக்க, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. எடப்பாடி, ஓபிஎஸ் அணிகள் வரிந்துக்கட்டிக் கொண்டு போட்டியில் குதித்துள்ளனர். இந்த நிலையில் பாஜ, பாமக கட்சிகளும் தங்களுக்கு தலா ஒரு மாநிலங்களவை எம்பி பதவி கேட்பதாலும், ஜாதிக்கு ஒரு சீட் வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கேட்பதாலும், அதிமுக தலைமைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 38 இடங்களில் போட்டியிட்ட அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்தது. ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற 37 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றனர். இதனால், அதிமுக.வில் எடப்பாடி - ஓபிஎஸ் அணிகள் இடையே கடுமையான கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது.இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழகத்திற்கான 6 மாநிலங்களவை எம்பி பதவிகள் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. மாநிலங்களவை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்னும் சில நாட்களில் அறிவிக்க உள்ளது. ஒரு எம்பியை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. அதன்படி, தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்பி.க்கள் இடத்தில், 3 இடங்களில் அதிமுகவும், 3 இடங்களில் திமுகவும் வெற்றிபெறுவது உறுதியாகி உள்ளது.

அதிமுகவுக்கு கிடைக்கும் 3 மாநிலங்களவை எம்பி பதவிகளை கேட்டு கூட்டணிக் கட்சிகள் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக, மக்களவைக்கான தேர்தல் கூட்டணி ஏற்பட்டபோதே, பாமகவுக்கு 7 சீட் மற்றும் ஒரு மாநிலங்களவை எம்பி பதவி என்று ஒப்பந்தம் போடப்பட்டது. அதனால் பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி பதவியை கொடுக்க வேண்டிய சூழ்நிலை அதிமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்ததற்கு பாஜ, பாமக, தேமுதிகவுடன் கூட்டணி சேர்ந்ததுதான் என்று அதிமுகவில் உள்ள 2ம் கட்ட தலைவர்கள், தொண்டர்கள் கூறி வருகிறார்கள். அதனால், அதிமுகவுக்கு கிடைக்கும் மக்களவை எம்பி பதவியை பாமகவுக்கு கொடுக்கக் கூடாது. பாமகவால் அதிமுக கூட்டணிக்கு நடந்து முடிந்த தேர்தலில் எந்த லாபமும் கிடைக்கவில்லை என்று போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். அதனால், பாமகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்கப்படுமா என்பது கேள்விகுறிதான். அதேபோன்று, தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர் ஆகியோருக்கு மத்திய பாஜ ஆட்சியில் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜெய்சங்கர், தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சர் ஆகவில்லை. இன்னும் 6 மாதத்திற்குள் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் அல்லது மாநிலங்களவை எம்பி பதவியில் வெற்றிபெற வேண்டும். அதனால், தமிழகத்தில் காலியாகும் மாநிலங்களவை எம்பி பதவியில் ஒன்றை அதிமுக சார்பில் பாஜ.வுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பாஜ.வுக்கு எம்பி பதவி கொடுக்கக் கூடாது என்று அதிமுக தலைவர்கள் உறுதியாக கூறி வருகிறார்கள். அவர்களின் எதிர்ப்பை மீறி, பாஜ.வுக்கு எம்பி பதவி கொடுக்கப்படுமா என்பது விரைவில் தெரியவரும்.

மீதமுள்ள ஒரு எம்பி பதவிக்கு, அதிமுக.வில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஓபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமி, எடப்பாடி ஆதரவுடன் தம்பிதுரை நேரடியாக போட்டியில் இறங்கி உள்ளனர். அதேபோன்று, மைத்ரேயன், கோகுல இந்திரா, அன்வர் ராஜா, மனோஜ் பாண்டியன், தமிழ்மகன் உசேன், பொன்னையன் உள்ளிட்ட அதிமுக முன்னணி தலைவர்கள் மாநிலங்களவை எம்பி பதவியை கைப்பற்ற களத்தில் குதித்துள்ளனர்.இதேபோல, ஜாதிக்கு ஒரு சீட் வழங்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் செல்வாக்காக இருக்கும் வன்னியர்களுக்கும், தென் மாவட்டங்களில் இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் வெற்றிக்கு காரணமாக இருந்ததால், அந்த தொகுதிகளில் அதிகமாக இருக்கும் தேவேந்திரர்கள் மற்றும் அதிமுகவின் வாக்கு வங்கியான சிறுபான்மையினரின் நல்மதிப்பை பெற்று இழந்த ஓட்டுக்களை மீண்டும் கைப்பற்ற முஸ்லிம்கள் மற்றும் யாதவர்களுக்கு சீட் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதில் யாருக்கு கொடுப்பது என்ற குழப்பத்தில் அதிமுக தலைமைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “மாநிலங்களவையில் 3 எம்பி பதவி அதிமுகவுக்கு கிடைக்கும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த 3 எம்பி பதவியை அதிமுகவுக்காக உழைத்த முன்னணி தலைவர்களுக்கே கட்சி தலைமை வழங்க வேண்டும். பாமக.வுடன் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அவர்களுக்கு ஒரு எம்பி பதவி கொடுக்க வேண்டுமா, வேண்டாமா; அவர்களால் வரும் காலத்தில் அதிமுகவுக்கு பயன் கிடைக்குமா என்று யோசித்து கட்சி தலைமை முடிவு செய்ய வேண்டும். மீதமுள்ள இரண்டு இடங்களில் எடப்பாடி அணிக்கு ஒரு சீட், ஓபிஎஸ் அணிக்கு ஒரு சீட் வழங்க வேண்டும். பாஜ.வுக்கு எக்காரணத்தை கொண்டும் எம்பி சீட்டை தாரைவார்க்கக் கூடாது. அதிமுகவில் தற்போது எடப்பாடி, ஓபிஎஸ் அணிகள் என இரண்டு அணிகள் உள்ளது. அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு ஒரே அணியாக இருந்தால் மட்டுமே வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க முடியும். அதற்கான நடவடிக்கையை அதிமுக கூடி பேசி முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.

தமிழ்மகன் உசேன் கெஞ்சல்

அதிமுக ஆட்சி மன்ற குழு உறுப்பினரும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராகவும் உள்ள தமிழ்மகன் உசேன் முதல்வர் எடப்பாடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “கடந்த 65 ஆண்டுகளாக (1954 முதல் 2019 வரை) பொது வாழ்க்கையில் இருக்கிறேன். 1972ம் ஆண்டு அதிமுக தொடங்கப்பட்டதில் இருந்து எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து கட்சியில் பல்வேறு பணிகளில் தொடர்ந்து இருந்து வருகிறேன். தற்போது எனக்கு 81 வயது ஆகியது. இதுவரை சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியதில்லை. இது எனக்கு வேதனையாக உள்ளது. எனவே, அதிமுவில் நான் ஆற்றிய பணிகளை எண்ணி பார்த்து, எனது உழைப்பையும், தியாகத்தையும், முதுமையையும் கருதி, இஸ்லாமியனாகிய எனக்கு வருகிற ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கும் மாநிலங்களவை தேர்தலில் எம்பி பதவியை அதிமுக சார்பில் எனக்கு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Tags : clash ,Rajya Sabha ,constituency , ADMK
× RELATED கரூர் தீயணைப்பு நிலையத்தில்...