×

நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கி ஏர்செல் சிவசங்கரன் தில்லுமுல்லு: நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: தனது கடனை அடைப்பதற்காக, நிதி நெருக்கடியில் சிக்கிய யுனிடெக் குரூப் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ஐஎப்ஐஎன் என்ற நிதிநிறுவனத்திடமிருந்து கடன் பெற்று தந்ததில், ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் தில்லுமுல்லு செய்துள்ளதாக ‘தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம்(எஸ்.எப்.ஐ.ஓ), மும்பை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மும்பையைச் சேர்ந்த நிதிச்சேவை நிறுவனம் ஐஎப்ஐஎன். மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு இந்நிறுவனம் கடன் வழங்குகிறது. ஏர்செல் நிறுவனர் சிவசங்கரனுக்கு சொந்தமான நிறுவனங்கள் ஐஎப்ஐஎன் நிறுவனத்திடம் கடன் பெற்றுள்ளன. அதை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வந்தார். இந்நிலையில், இந்த கடன்களை அடைப்பதற்காக ஐஎப்ஐஎன் நிதி நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் இணைந்து அவர் கூட்டுச் சதி செய்தார். அவர்களுடன் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, ‘யுனிடெக் குரூப்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ.125 கோடி கடனை சிவசங்கரன் வாங்கி கொடுத்தார். இந்த நிறுவனம் சிவசங்கரன் நிறுவனத்துக்கு கடன் கொடுக்க வேண்டியிருந்தது. ஐஎப்ஐஎன்.னிடம் இருந்து வாங்கிய ரூ.125 கோடி கடன் தொகையில் இருந்து ₹80 கோடியை எடுத்து, சிவசங்கரனின் நிறுவனத்துக்கு கொடுத்து கடனை அடைத்ததாக கணக்கு காட்டியது. சிவசங்கரன் இந்த தொகையை எடுத்து, ஐஎப்ஐஎன நிறுவனத்திடம் தனது நிறுவனம் வாங்கிய கடன்களில் சிலவற்றை அடைத்தார்.

ஐஎப்ஐஎன் நிறுவன அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து சிவசங்கரன் தவறான வழியில் ஆதாயம் பெற்றதை கண்டுபிடித்த அக்ருட்டி, எல் அண் டி போன்ற நிறுவனங்கள் பிரச்னையை எழுப்பின. இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் பெரு நிறுவன துறையின் கீழ் செயல்படும் புலனாய்வு அமைப்பான, ‘தீவிர மோசடி புலனாய்வு அமைப்பு’ (எஸ்எப்ஐஓ) விசாரணை நடத்த தொடங்கியது. அதில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. விதிமுறைகளுக்கு புறம்பாக கடன் வாங்குவது தொடர்பாக ஐஎப்ஐஎன் தலைவர் ரவி பார்த்தசாரதியுடன், சிவசங்கரன் இ-மெயில் மூலம் செய்த தகவல் பரிமாற்றங்களுக்கான ஆதாரங்கள், இந்த புலனாய்வு அமைப்பிடம் சிக்கியது. அதன் அடிப்படையில், மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இந்த புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அந்த குற்றப்பத்திரிகையில் எஸ்எப்ஐஓ கூறியிருப்பதாவது: யுனிடெக் குரூப் ரியல் எஸ்டேட் நிறுவனம், சிவசங்கரனின் ‘சிவா வென்ச்சர்ஸ்’ நிறுவனத்திடம் கடன் வாங்கி இருந்தது. இதை வசூலிப்பதற்கு சிவசங்கரன் திட்டமிட்டார். இதற்காக ஐஎப்ஐஎன் நிறுவனத்தின் தலைவர் ரவி பார்த்தசாரதி, துணைத் தலைவர் சங்கரன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து, யுனிடெக் குரூப் நிறுவனத்துக்கு ரூ.125 கோடி கடன் வாங்கி கொடுத்துள்ளார். இந்த பணத்தை வைத்து, சிவசங்கரனின் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.80 கோடி கடனை யுனிடெக் குரூப் நிறுவனம், திருப்பிச் செலுத்தியது. இதைத் தொடர்ந்து, அந்த பணத்தை எடுத்து நிதி நிறுவனத்திடம் தான் பெற்ற கடன்களில் சிலவற்றை சிவசங்கரன் அடைத்துள்ளார். ஐஎப்ஐஎன் நிர்வாகத்தின் தலைவர் ரவி பார்த்தசாரதிக்கும், இந்த அமைப்பின் துணைத் தலைவர் சங்கரனுக்கும் இந்த மோசடியில் நெருங்கிய தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிவசங்கரனின் சிவா குரூப் நிறுவனங்கள், ஐஎப்ஐஎன் நிறுவனத்திடம் பெற்ற பல கடன்களை திருப்பிச் செலுத்தவில்லை. அப்படி இருந்தும் ரவி பார்த்தசாரதியும், சங்கரனும் சிவசங்கரனிடம் தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைந்து, தங்கள் கம்பெனி மற்றும் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக சிவா குரூப் நிறுவனங்களுக்கு கடன் வழங்கியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Aircel Sivasankaran ,finance company , Sheet
× RELATED பறிகொடுத்த பணத்தை மீட்டுத்தர...