×

சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு பட்டியலை ரத்து செய்யக்கோரி வழக்கு: ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: சட்டக் கல்லூரிகளில் மனித உரிமைகள் துறை உதவி பேராசிரியர் பணியிடத்திற்கான தேர்வு பட்டியலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒக்கியம் துரைப்பாக்கத்தை சேர்ந்த சங்கீதா ஸ்ரீராம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் மனித உரிமைகள் துறையில் உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2018 ஜூலை 18ல் வெளியிட்டது. இந்த பணிக்கான எல்லா கல்வித் தகுதியையும் பெற்றுள்ளேன்.

எழுத்துத் தேர்வு அக்டோபர் 14ம் தேதி நடந்தது. எழுத்து தேர்வில் 175 மதிப்பெண்களுக்கு 133 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்தேன். அதன் பிறகு 25 மதிப்பெண்களுக்கான நேர்முகத் தேர்வு 2019 பிப்ரவரியில் நடந்தது.
இதையடுத்து, கடந்த மே 14ம் தேதி உதவி ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்டது. தேர்வு பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை. மாறாக என்னைவிட குறைந்த மதிப்பெண்கள் அதாவது 175க்கு 122, 121, 118 மதிப்பெண்கள் பெற்றவர்களின் பெயர்கள் தேர்வு பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. எனது நேர்முகத் தேர்வு மதிப்பெண்ணை வெளியிடக் கோரி ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலரிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால், எனது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் சட்ட கல்லூரி மனித உரிமைகள் துறை உதவி ஆசிரியர்கள் தேர்வில் வெளிப்படைத் தன்மையை பின்பற்றவில்லை. தங்களுக்கு வேண்டப்பட்ட நபர்களை தேர்வு செய்துள்ளனர். இதில் முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட தேர்வு பட்டியலை ரத்து செய்ய வேண்டும். எனக்கு பணி வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் நர்மல்குமார் மோகன்தாஸ் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு 2 வாரங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் தரவேண்டும் என்று உத்தரவிட்டதுடன் சட்டக் கல்லூரி மனித உரிமைகள் துறை உதவிப் பேராசிரியர் பணியிடத்தில் பொதுப்பிரிவில் ஒரு இடத்தை மனுதாரருக்காக ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Tags : Examination Board , Law college
× RELATED டிஎன்பிஎஸ்சி தேர்வாணயத்தின் மூலம்...