×

பூமி பூஜையோடு நின்றுபோன திட்டம் திருச்செந்தூரில் புதிய விருந்தினர் மாளிகை கட்டப்படுமா? கண்டுகொள்ளாத கர்நாடக அரசு

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் கர்நாடக அரசு சார்பில் 5 கோடியில் புதிய விருந்தினர் கூடம் கட்டுவதற்கான திட்டம் பூமி பூஜையுடன் நின்றுபோனது. இது விரைவில் கட்டப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  அறுபடை வீடுகளில் 2ம்  படை வீடாகவும், சூரனை சம்ஹாரம் செய்த தலமாகவும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது.  வருடத்தில் குறிப்பிட்ட சில மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் இங்கு  திருவிழாக்கள்  களைகட்டும். எழில் கொஞ்சும் கடற்கரையுடன் கோயில் அமைந்துள்ளதால்  பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா வந்தும் மனம் மகிழ்கின்றனர். வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக இங்கு கோயில் நிர்வாகம் மற்றும்  தனியார் நிறுவனங்கள் சார்பில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.  தனியாருக்கு சொந்தமான சிறப்பு விருந்தினர் மாளிகையும் உள்ளது.

இந்நிலையில்  கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு வந்த அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கர்நாடக அரசு சார்பில் திருச்செந்தூரில் ₹5 கோடியில் புதிய விருந்தினர் மாளிகை கட்டப்படும்  என அறிவித்தார்.  இதையடுத்து  தற்போது வேலையா குடில் இருக்கும் இடத்தில் புதிய விருந்தினர் மாளிகை கட்டுவதற்கான பூமி பூஜையும் நடந்தது. அத்துடன் வேலையா குடிலை  இடித்து அப்புறப்படுத்தும் பொருட்டு அதன் அருகே அறிவிப்பு பலகையும்  வைக்கப்பட்டது. அதில், ‘‘‘கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளதால் இடித்து அப்புறப்படுத்தப்பட உள்ளது. எனவே இதன் அருகே யாரும் செல்ல  வேண்டாம்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தனிடையே கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து சித்தராமையா  முதல்வரானார். இதனால் திருச்செந்தூரில் எடியூரப்பா பூமி பூஜை நடத்திய விருந்தினர் மாளிகை திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ  பெரும்பான்மை பெற்றபோதும் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணியால் குமாரசாமி முதல்வராகப் பதவியேற்றார். குமாரசாமியும், அவரது தந்தையான முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் முருக  பக்தர்கள் என்பதால் ஆண்டுக்கு ஒன்று அல்லது இருமுறை திருச்செந்தூர்  கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். எனவே, திருச்செந்தூரில் கர்நாடக அரசு சார்பில் புதிய விருந்தினர் கூடம் கட்ட திட்டமிடப்பட்டு பூமிபூஜையுடன் நிற்கும் பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என்பதே பக்தர்கள் உள்ளிட்ட அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : guest house ,Tiruchendur ,Government ,Carnatic , Thiruchendur, New guest house, Karnataka Government
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...