×

அழிவின் விளிம்பில் சுண்ணாம்பு உற்பத்தி தொழில் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு

தாராபுரம்: தற்கால சூழலில் அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பாரம்பரியமாக செய்யப்பட்டு வந்த பல்வேறு தொழில் அழிந்து வரும் நிலையில் அந்த வரிசையில் சுண்ணாம்பு உற்பத்தி செய்யும் சுண்ணாம்பு காளவாய்களும் அழிவின் விளிம்பிற்கே சென்றுவிட்டன. இதனால் இதை நம்பியிருந்த தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.  தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை என்றாலே, கரும்பு வரிசையில், வீட்டுச்சுவர்களுக்கு வெள்ளையடிக்க சுண்ணாம்பும் நினைவுக்கு வரும். சுண்ணாம்பு உற்பத்தி செய்வதற்காகவே ஒவ்வொரு ஊரிலும் சுண்ணாம்பு காளவாய்கள் இருக்கும். ஆனால், தற்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியாலும் அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் பரிணாம வளர்ச்சியாக சுண்ணாம்பை கடந்து, சுவருக்கு வண்ணம் பூச விதவிதமான வண்ணங்களில் பெயிண்ட் வகைகள் அணி வகுத்து விட்டன. இவற்றின் வரவால், சுண்ணாம்பு உற்பத்தில் தொழில் அழிவின் விளிம்பிற்கே சென்றுவிட்டது.

முன்பு ஊர் ஊருக்கு நிரம்பியிருந்த சுண்ணாம்பு காளவாய் இன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில மட்டுமே காணப்படுகிறது. சுண்ணாம்பு உற்பத்தி செய்வதற்கு முதல்படியாக ஓடையில் இருந்து தகுந்த கற்களை தேடி எடுத்து வந்து அதை சிறு சிறு கற்களாக உடைத்து, பின்னர் சிறு கூடைகளில் அள்ளி 10 உயரமுள்ள காளவாய் எனப்படும் மண்ணால் கட்டப்பட்ட தொட்டியில் போடுவார்கள். பின்னர் ஒருநாள் முழுவதும் தொட்டியின் அடியில் விறகு மூலம் தீவைத்து நெருப்பு மூட்டினால் ஒடைக்கல் சுண்ணாம்பு கல்லாக மாறிவிடும். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாரத்தில் உப்புதுறைபாளையம், சங்கர் மில்தெரு, பலிஜிவார் தெரு, வரப்பாளையம், அலங்கியம் உள்ளிட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட சுண்ணாம்பு உற்பத்தி செய்யும் காளவாய்கள் இருந்தன. ஆனால், காலப்போக்கில் இவை காட்சிப்பொருளாகிவிட்டது.

தற்போது உப்புதுறைபாளையத்தில் மட்டும் ஒரே ஒரு சுண்ணாம்பு காளவாய் மட்டும் இயங்குகிறது. சுமார் 15 ஆண்டுக்கு முன்,பலர் பணிபுரிந்த இத்துறையில், தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுேம தொழிலாளர்கள் பணியில் உள்ளனர்.இதுகுறித்து 50 ஆண்டாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சுப்பிரமணி கூறியதாவது: 15 வருடங்களுக்கு முன்பு வரை நாள்தோறும் 10 பேர் வேலை செய்து வந்தனர். உற்பத்தி செய்யப்படும் சுண்ணாம்பு உடனுக்குடன் விற்றுவிடும். ஆனால், சிமென்ட் டிஸ்டம்பர் வந்த பிறகு இத்தொழில் அடியோடு முடங்கிவிட்டது. தற்போது, இரண்டு பேர் மட்டுமே வேலை செய்து வருகிறோம்.அதுவும், மாதத்தில் இரண்டு நாள் மட்டுமே வேலை இருக்கிறது.மற்ற நாட்களில் கட்டட வேலைக்கு செல்கிறோம். முன்பு, சுண்ணாம்பு உற்பத்தி செய்தால் உடனுக்குடன் விற்று தீர்ந்துவிடும்.

ஆனால், தற்போது கிடப்பில் உள்ளது. சிறிய அளவில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மட்டுமே இவற்றை வாங்கிச்செல்கின்றனர். தவிர, கான்கிரீட் தளங்களில் சுருக்கி போடுவதற்கும், பட்டுப்புழு, கோழிப்பண்ணைகளுக்கு கிருமி நாசினியாகவும் விவசாயத்திற்கு உரமாகவும், சித்தமருத்துவர்கள் மருந்து தயாரிக்கவும் இவற்றை வாங்கிச்செல்கின்றனர். முற்றிலும் அழிவு நிலைக்கு சென்றுவிட்ட சுண்ணாம்பு காளவாய் தொழிலை மத்திய-மாநில அரசுகள் ஊக்கப்படுத்த ேவண்டும். இத்தொழிலை நம்பியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு சுப்பிரமணி கூறினார்.



Tags : collapse , Lime production industry, workers, job loss
× RELATED தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்த...