×

எடப்பாடி, ஓபிஎஸ் தலைமைக்கு எதிராக அதிமுக எம்எல்ஏ திடீர் போர்க்கொடி

மதுரை: மக்களவை தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து, அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. எடப்பாடி, ஓ.பி.எஸ் இரட்டை தலைமை இருக்கக்கூடாது. ஒற்றைத்தலைமையே இருக்க வேண்டுமென, மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா திடீரென போர்க்கொடி தூக்கி உள்ளார். மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் 22 தொகுதியில் போட்டியிட்டு 9 இடங்களை மட்டுமே பெற்றது. இந்த தோல்விக்கு பிறகு அதிமுகவுக்குள் கோஷ்டி பூசல் உருவாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே பிரச்னை தலைதூக்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலமும் திடீரென்று போர்க்கொடி தூக்கினார். அவருக்கு 3 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் உச்சக்கட்டமாக மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான ராஜன் செல்லப்பா பகிரங்கமாகவே அதிமுக தலைமை சரியில்லை, பொதுக்குழுவை உடனடியாக கூட்டி கட்சிக்கு ஒரே தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளார். இதுபற்றி நேற்று மதுரையில் அவர் அளித்த பேட்டி: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டை தலைமையும், 2 துணை ஒருங்கிணைப்பாளர்களும் உள்ளனர். இரட்டை தலைமையால் கட்சியில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களில் அதிமுக தோல்விக்கு இதுவும் காரணம். திறமையான கட்சியை கட்டுப்பாடுடன் வழிநடத்தும் ஒரே தலைமை தேவை. இரட்டை தலைமை இருக்கவே கூடாது. தேர்தல் முடிவு வெளியாகி 15 நாட்களுக்கு மேலாகியும், இதுவரை பொதுக்குழுவை கூட்டி தோல்விக்கான காரணங்களை ஆலோசித்து, சுயபரிசோதனை செய்து கொள்ளவில்லை. அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் என்னிடம் மனக்குமுறல்களை வெளிப்படுத்தினர். கட்சிப்பொதுக்குழுவை உடனே கூட்டி கட்சிக்கு ஒற்றை தலைமை அதாவது அதிகாரமுள்ள பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அதிமுகவின் எதிர்காலம் கருதி, தயக்கமின்றி எனது கருத்தை சொல்கிறேன். இதற்காக என்னை பலர் விமர்சிக்கலாம். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.

தேர்தல் தோல்விக்கு அதிகாரம் மிகுந்த தலைமை இல்லாததால், கட்சி நிர்வாகிகள் தொண்டர்களிடம் கட்டுப்பாடு குலைந்தது. அதன்காரணமாகவே ஆண்டிப்பட்டி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தோல்வியை சந்தித்தோம். ஜெயலலிதாவை விட, எடப்பாடி அரசு அதிக திட்டங்களை கொண்டு வந்திருந்தாலும் அது மக்களுக்கு சென்றடையவில்லை. இதை மாவட்ட செயலாளர், எம்எல்ஏ என்ற முறையில் நானும் உணர்ந்து விட்டேன். ஒரே தலைமை யார் என்பதை கட்சிப் பொதுக்குழுவில்தான் முடிவெடுக்க வேண்டும். அது யார் என்பதை பொதுக்குழுவில் சொல்வோம். தற்போது அதிகாரம் யாரிடம் உள்ளது என்றே அறிய முடியவில்லை. எனவே, கட்சியில் சோரவும், நெருடல்களும் அதிகரித்துள்ளன. ஆட்சியும், கட்சியும் முக்கியம் என்றாலும், தேர்தல் வெற்றியும் மிக முக்கியம். டி.டி.வி.தினகரன் ஒரு மாயை என்பது இந்த தேர்தலில் நிரூபிக்கப்பட்டு விட்டது. அவரை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அதிமுக தலைமை தொண்டர்களின் மனநிலையை அறிந்து செயல்பட வேண்டும். மக்களவை இடைத்தேர்தல் முடிந்தபிறகு தேனியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத் குமார் மட்டும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி இருக்கிறார்.

9 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் காப்பாற்றிய 9 பேரும், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று இதுவரை மரியாதை செலுத்தவில்லை. இது அந்த 9 பேரின் குற்றமா? கட்சித் தலைமையின் குற்றமா? அந்த 9 பேரையும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல விடாமல் தடுக்கும் சக்தி எது? இதன் பின்னணி என்ன? இதுபோன்ற நெருடல்களால்தான் அதிமுக நிலைதடுமாறி வீழ்ந்து விடுமோ என்ற அச்சம் எழுகிறது. எனவேதான், பொதுக்குழுவை உடனே கூட்டி, அவசர ஆலோசனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ஜெயலலிதா மரணத்திற்குப்பிறகு இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைப்பு என்று சொன்னாலும் அது உண்மையானதாக இல்லை. இந்த கருத்துகளை நான் வெளியிடுவதால், கட்சி என்மீது நடவடிக்கை எடுத்தாலும் அதனை ஏற்கத் தயாராக இருக்கிறேன். . இதற்கு முன், சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்காவிட்டால், இந்த ஆட்சி இருந்து என்ன பயன்? என்று கேட்டேன். உடனடியாக திறந்து வைத்தார்கள். எனவே என்னுடைய கருத்தை கட்சியின் எதிர்காலம் கருதி கட்சித்தலைமை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். ஒரு கட்சியில் ஒரு பொதுச்செயலாளர் இருக்க வேண்டுமே தவிர, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், 2 துணை ஒருங்கிணைப்பாளர்கள் என்று இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். அதிமுக தலைமையை விமர்சித்த எம்எல்ஏ ஒருவர் பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பதில் அளிக்கவில்லை. அதேநேரத்தில் அவர் வெளிப்படையாக பேட்டி அளித்த பின்னரும் அவரிடம் விளக்கம் கேட்கப்படவில்லை. இதனால் அதிமுக தலைமையை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். யாரும் கேட்க முடியாது என்ற நிலை தற்போது அதிமுகவில் உருவாகியிருப்பதாக தொண்டர்கள் வேதனைப்படுகின்றனர். மேலும், பல எம்எல்ஏக்கள் தனது மனநிலையிலேயே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது அதிமுகவினர் மத்தியில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் பதவி தராததால் அதிருப்தியா?

ராஜன் செல்லப்பாவிடம், ‘‘நீங்கள் அமைச்சர் பதவி கேட்டு மறுக்கப்பட்டதால் இவ்வாறு பேசுவதாக கூறுகிறார்களே?” என்று கேட்டதற்கு, “அதை தாண்டி வந்து விட்டேன். 31 பேர் என்ன? 58 அமைச்சர்கள் கூட இருக்கலாம். ஜெயலலிதா இருந்திருந்தால் அமைச்சர்கள் மாற்றம் 10 முறையாவது நடந்து இருக்கும். செயல்பாடு இல்லாதவர்கள், தவறு செய்தவர்களை மாற்றி புதியவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கி இருப்பார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த சிலர் கூட அமைச்சர் பதவிக்காக காத்திருந்தனர். கிடைக்கவில்லை. அமைச்சரவை மாற்றம் இல்லா விட்டாலும் ஆட்சி கவிழாது” என்றார்.

பொதுக்குழுவில் ஏற்கா விட்டால்...?

ராஜன் செல்லப்பாவிடம், ‘‘ஒரே தலைமை என்று யாரைச் சொல்கிறீர்கள்? சசிகலாவா?’’ என்று கேட்டதற்கு, ‘‘அவர்தான் ஜெயிலில் இருக்கிறாரே?’’ என்று பதிலளித்தார். தொடர்ந்து, ‘‘உங்கள் கருத்து கட்சியில் ஏற்கப்படாவிட்டால், உங்கள் முடிவு என்ன?’’ என்று கேட்டதற்கு ‘‘பொதுக்குழுவில் ஒற்றை தலைமையை வலியுறுத்துவோம். ஏற்காவிட்டால் அதன்பிறகு பார்ப்போம்’’ என்றார்.

அமைச்சர் ஆதரவாளர் வெளியேறியதால் பரபரப்பு

ராஜன் செல்லப்பா எம்எல்ஏ, பேட்டி அளித்தபோது, அமைச்சர் உதயகுமாரின் ஆதரவாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான தமிழரசன் திடீரென எழுந்து வெளியேறினார். ராஜன் செல்லப்பா அழைப்பின்பேரில் வந்த மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளானையும், தமிழரசன் இடைமறித்து அழைத்துச் சென்று விட்டார்.

Tags : AIADMK ,outbreak ,MLA ,Ottapiti ,OPS , Edappadi, OPS, AIADMK
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மரணம்