×

சென்னை மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் பணி தீவிரம் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் நாளை வெளியீடு: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்காக அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடிகளின் வரைவுப் பட்டியலை 10ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் தயார் செய்தல், வாக்குச்சாவடி அமைக்கும் பணிகளில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.  அதன்படி, சென்னை மாநகராட்சியில் வாக்காளர் பட்டியல் தயார் செய்தல் மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

இதில் துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) லலிதா, 15 மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலை கொண்டு வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் புதிய வாக்காளர்களை சேர்க்க சிறப்பு முகாம் நடத்தவும் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. அவ்வாறு சிறப்பு முகாம் மூலம் சேர்க்கப்படும் வாக்காளர்களை துணை பட்டிலில் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டது. மாநகராட்சிகளில் ஒரு வார்டில் 1,400 வாக்காளர்கள் இருந்தால் ஒரு ஒரே வாக்குச்சாவடியும், 1,400 முதல் 2,800 வாக்காளர்கள் இருந்தால் இரண்டு வாக்குச்சாவடியும், 2,800 முதல் 4,200 வாக்காளர்கள் இருந்தால் 3 வாக்குச்சாவடிகளும் அமைக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி சென்னை மாநகராட்சியில் எவ்வளவு வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதன் முடிவில் உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னையில் 5,720 வாக்குச்சாவடிகள் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆண் வாக்காளர்களுக்காக 78 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்காக 78 வாக்குச்சாவடிகளும் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்காக 5564 வாக்குச்சாவடிகளும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல் 10ம் தேதியன்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.



Tags : Prakash , Chennai Corporation, Local Election Work, Poll list, Municipal Commissioner Prakash
× RELATED தினமும் காலையில் எழுந்தவுடன் 100...