×

சுரங்கப்பாதையில் ஏசி பயன்பாடு குறைக்கப்பட்டதால் மெட்ரோ ரயில் நிலையங்களில் முதியோர்கள் கடும் அவதி

சென்னை: சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏசி பயன்பாடு குறைக்கப்பட்டதால் போதிய காற்றோட்டம் இல்லாமல் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார்கள் குவிந்து வருகின்றது.  சென்னை முழுவதும் குடிநீர் பஞ்சத்தால் மக்கள் தவித்து வருகின்றனர். சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளிலும் தண்ணீர் இல்லாததால் ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. இந்தநிலையில், சென்னையில் 45 கி.மீட்டர் தூரத்தினாலான 32 மெட்ரோ ரயில் நிலையங்களில் 19 ரயில் நிலையங்கள் சுரங்கபாதைகளில் செயல்படுகிறது.இங்கு வெயில்காலத்தில் போதிய குளிர்சாதன பயன்பாடும், காற்றோட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில், கடந்த மாதம் 27ம் தேதி மின்சார செலவீனத்தை குறைக்கும் வகையிலும், சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டும் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களில் படிப்படியாக குளிர்சாதன வசதி குறைக்கப்படும். பயணிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் போதிய ஆக்சிஜன் வசதி கிடைக்கும். எனவே, பயணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, சுரங்கபாதை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏசி பயன்பாடும் குறைக்கப்பட்டது. இந்தநிலையில், சுரங்கபாதை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏசி பயன்பாடு மட்டும் இல்லாமல் காற்றோட்ட வசதியும் குறைக்கப்பட்டதால் முதியோர்களும், நோயாளிகளும் கடும் அவதியை அடைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து பயணிகள் தரப்பில் கூறியதாவது:

தண்ணீர் தட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டு ஏசி பயன்பாட்டை குறைத்தது ஒரு புறம் வரவேற்கத்தக்கது தான். ஆனால், ஆக்சிஜன் வசதியும் குறைவாக உள்ளதால் வயதானவர்கள் கடும் அவதியடைகிறார்கள். மூச்சி விட சிரமமாக உள்ளது. எனவே, இதை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து போதிய ஆக்சிஜன் வசதி கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, எழும்பூர், சென்ட்ரல், டி.எம்.எஸ், தேனாம்பேட்டை உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் இது பிரச்னையாக உள்ளது. உடனடியாக இதை நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினர்.



Tags : stations ,subway ,AC , Subway, AC utility, Metro stations, Elders
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...