×

குவாரிகளை ஆய்வு செய்ய குழு அமைகிறது போலி எம்சாண்ட்டை தடுப்பது எப்படி? தொழில்நுட்ப வல்லுனர்கள் கூட்டத்தில் ஜூலை 19ல் ஆலோசனை

சென்னை: போலி எம்சாண்ட் பயன்பாட்டை தடுப்பது எப்படி என்பது குறித்து வரும் ஜூலை 19ம் தேதி நடைபெறும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.  தமிழகத்தில் ஆற்றுமணலுக்கு மாற்றாக எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணல் பயன்பாட்டை ஊக்குவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் 1,300 எம்சாண்ட் குவாரிகளுக்கு தனித்தனியாக கடிதம் எழுதியது. தற்போது வரை 112 குவாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் ஜல்லி உடைக்கும் போது வரும் தேவையற்ற துகள்களை எம்சாண்ட் எனக்கூறி சிலர் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது ஆற்றுமணல் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் கட்டுமான நிறுவனங்கள் வேறுவழியின்றி போலி எம்சாண்ட் மணலை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால், கட்டிடங்களின் உறுதி தன்மையில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், போலி எம்சாண்ட் பயன்பாட்டை தடுக்கும் வகையில், எம்சாண்ட் குவாரிகளை ஒழுங்குமுறைப்படுத்த புதிதாக எம்சாண்ட் வழிகாட்டி நெறிமுறைகளை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, மணல் குவாரி செயல்பாடுகளின் திட்ட இயக்குனர் அருண் தம்புராஜ் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் எம்சாண்ட் குவாரிகளின் புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்கப்பட்டு, தமிழக அரசின் ஒப்புதல் கேட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் ஜூலை 19ம் தேதி ஐஐடி, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம், சிஎம்டிஏ, டிடிசிபி, மிலிட்டரி சர்வீஸ், அகில இந்திய கட்டுனர் சங்கம் உட்பட 24 பேர் கொண்ட தொழில் நுட்ப வல்லுனர்கள் குழு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில், போலி எம்சாண்ட் பயன்பாட்டை தடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது.

மேலும், இக்கூட்டத்தில், பொதுப்பணித்துறையில் தலைமையில் குவாரிகளை ஆய்வ செய்ய குழு அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் தேர்வு செய்யப்படும் குழுவினர் தான் எம்சாண்ட் குவாரிகளில் நேரில் ஆய்வு செய்கின்றனர். அந்த குவாரிகளில் போலி எம்சாண்ட் தயாரிக்கப்படுவது தெரிய வந்தால், அந்த குவாரிக்கு சீல் வைத்து அபராதம் வசூலிப்பார்கள் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Emzad ,experts ,meeting , Quarries, fake emiss, tech experts
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...