×

தினக்கூலி அடிப்படையில் ஓய்வு பெற்ற ரயில் ஓட்டுனர்களை மீண்டும் பணியமர்த்த ரயில்வே முடிவு: திட்டத்தை கைவிட தொழிற்சங்கம் வலியுறுத்தல்

மன்னார்குடி: ஓய்வு பெற்ற ரயில் ஓட்டுனர்களை தினக்கூலி அடிப்படையில் மீண்டும் பணியமர்த்த ரயில்வே முடிவு செய்துள்ளது. இதனால் விபத்துகள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளதால் அத்திட்டத்தை கைவிட்டு தேர்வு ஆணைய பணிகளை துரித படுத்த வேண்டுமென ரயில்வே தொழிற் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இந்தியா முழுவதும் ரயில் ஓட்டுனர்கள்  பிரிவில் நிறைய காலிப்பணியிடங்கள்  உள்ளது. பல மண்டலத்தில் வழக்கமான ரயில்களை கூட இயக்குவதற்கு  தடுமாறி வருகின்றன. இதனால் ரயில்வே வாரிய இயக்குனர் நிரஜ் குமார் கடந்த ஜூன் 4 ம் தேதி ஓய்வு பெற்ற உதவி லோகோ பைலட்டுகளை மீண்டும் தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்த உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். மருத்துவ தகுதியுடன் கூடிய 60 முதல் 65 வயதிற்கு உட்பட்ட ஓய்வு பெற்ற ஓட்டுனர்கள் மீண்டும்   பணியமர்த்தப் பட இருக்கிறார்கள். ஜல்லி கற்கள், ரயில்வே தளவாடங்கள் ஏற்றிச் செல்லும் துறை ரயில்கள் இயக்க, பெரிய ரயில் நிலையங்களில் என்ஜின்கள் அவிழ்த்து மாட்ட, பராமரிப்பு யார்டுகளுக்கு பெட்டிகள் கொண்டு சென்று வர இவர்களை பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறது.

தெற்கு ரயில்வேயில் 835 இன்ஜின்கள், 4 ஆயிரத்து 798 ரயில் ஓட்டுனர் பணியிடங்கள் உள்ளது. இதில் 539 காலியிடங்கள். தற்சமயம் 150 பேர் தேர்வு செய்யப்பட்டு ஓட்டுனர் பயிற்சியில் இருக்கிறார்கள். தேர்வு வாரியம் 528 உதவி ஓட்டுனர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய இருக்கிறது. இவர்கள் பணியில் சேர ஒரு  ஆண்டுக்கு மேல் ஆகும். இதனால் தெற்கு ரயில்வே ஓய்வு பெற்ற ரயில் ஓட்டுனர்களை மீண்டும் பணியமர்த்த இருக்கிறது. இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் மாநில துணைப் பொதுச்செயலாளர்  மனோகரன் கூறுகையில்,பயணிகள் ரயில்கள் இயக்க அனுமதிக்காமல் ரயில் நிலைய ஷன்டிங் இன்ஜின்கள், துறைக்கான ரயில்கள் மட்டும் இயக்க அனுமதித்து இருப்பதில் இருந்தே, இவர்களால் விபத்து ஏற்பட்டால் பெரிய பின் விளைவுகள் இருந்து  விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு நிர்வாகத்திற்கு இருப்பது தெளிவாகிறது. ரயில் நிலையங்களுக்குள் ஷன்டிங் செய்வதில் நிகழ்ந்து நிறைய விபத்துகள் இருக்கிறது. விபத்து நிகழ்ந்தால் இவர்களை விசாரணை  வளையத்திற்குள் கூட கொண்டு வர முடியாது.

விபத்துக்கள் எண்ணிக்கையை குறைக்கவே 1 லட்சம் கோடி பாதுகாப்பு நிதி மத்திய அரசு உருவாக்கியது. ரயில்வே கேட்டுகள்  அனைத்தையும் ஆட்கள்   உள்ளதாக மாற்றியது. தண்டவாள பராமரிப்பு நேரம் உருவாக்கியது.  விபத்துகள் எண்ணிக்கை கடந்த இரண்டு நிதியாண்டுகளாக இரட்டை இலக்கத்தில் குறைந்தும் இருக்கிறது. உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சோர்வு அடைந்து இருப்பவர்களால் விபத்துகள் நிகழ வாய்ப்புகள் அதிகம். ஒருபுறம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களை மூத்த குடிமகன்களாக கருதி ரயில்வே சலுகை வழங்குகிறது. zமறுபுறம்  அவர்களை கொண்டு ரயில்கள் இயக்க முனைகிறது. காலிப்பணியிடங்களை முன்கூட்டி நிரப்ப திட்டமிடாததே  இதற்கு காரணம். எனவே இந்த திட்டத்தை ரயில்வே ஆணையம் கைவிட்டு  தேர்வு ஆணைய நடைமுறைகளை  துரிதப்படுத்த வேண்டும் என்றார்.


Tags : rail drivers ,union , Daily wage, retired rail drivers, union
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...