×

போலீஸ் சேனல்: என்கொயரி ஆபீசருக்கு கல்தா கொடுத்த இன்ஸ்...

மாங்கனி மாவட்டம் ஆத்தூரில் பொய்யாக பிசிஆர் வழக்கு போட்டு மிரட்டிய விவகாரத்தில் திமுக பிரமுகர், வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில், தனது சாவிற்கு பணம் கேட்டு மிரட்டிய டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் தான் காரணம் என்று தெளிவாக சொல்லியிருந்தார். பெரும் பரபரப்புக்குள்ளான  இந்த வழக்கு விவகாரத்தில், துறை ரீதியான விசாரணை நடத்த மாவட்ட எஸ்பி, கூடுதல் எஸ்பியை நியமித்தார். அவரும் தனது விசாரணையை புகார்தாரரான தற்கொலை செய்துகொண்டவரின் குடும்பத்தாரிடம் இருந்து தொடங்கினார். அடுத்தகட்டமான டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், ஸ்டேஷனில் பணியாற்றும் எஸ்ஐக்கள், ஏட்டுகளை  விசாரிக்க திட்டமிட்டிருந்தார்.

பிரச்னையை தவிர்க்க ஸ்டேஷன் பணியில் இருந்து இன்ஸ்பெக்டரை விலக்கி ஊட்டி மலர் கண்காட்சி பாதுகாப்பு பணிக்கு அனுப்பியிருந்தனர். அவர் மீண்டும் வந்தவுடன் முதலில் இன்ஸ்பெக்டரிடம் விசாரிக்க வேண்டுமென்று என்கொயரி ஆபீசர் நினைத்திருந்தாராம். ஆனா, ஊட்டியில் இருந்து வந்த வேகத்தில் ஸ்டேஷனில் மெடிக்கல் லீவு லட்டரை எழுதி வைத்துவிட்டு, எஸ்கேப் ஆகிவிட்டாராம் இன்ஸ்பெக்டர். இதனால், உயர் அதிகாரிகளே அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுவிட்டார்களாம். விசாரணையில் இருந்து தப்பிக்க என்கொயரி ஆபீசருக்கு கல்தா கொடுத்தது மட்டுமில்லாமல், தற்போது அந்த இன்ஸ்பெக்டர், அரசியலில் முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் மூலம் விஷயத்தையே முடித்திட காய்களை நகர்த்தி வருகிறாராம். இது தான், மாங்கனி  மாவட்ட போலீஸ் அதிகாரிகள் வட்டத்தில் தற்போது ஹாட் டாபிக்காக உள்ளது.

பங்கெல்லாம் கிடையாது.. நானே ஒன் மேன் ஆர்மி...!
ஈரோட்டில் கிருஷ்ணன் பெயர் கொண்ட 3 டிஎஸ்பி.,க்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஒருவர் சீட்டாட்ட கிளப்புகளில் பணம் வசூலிப்பதில் கறாராக உள்ளார். இவர், ஈரோட்டில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோதே வசூலில் பலே கில்லாடி. உயரதிகாரிகளுக்கு அல்வா கொடுத்து விட்டு, இவர் மட்டும் புத்திசாலித்தனமாக காரியம் சாதித்துக்கொள்கிறார். இவர், இன்ஸ்பெக்டர் முதல் டிஎஸ்பி வரை இங்கேயே தொடர்ந்து பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதால், சட்ட விரோத சீட்டாட்ட கிளப் எங்கெல்லாம் நடக்கிறது? அதை யார் யார் நடத்துகிறார்கள்? என்ற முழு ஜாதகத்தை கையில் வைத்துள்ளார். சூழ்நிலைகளுக்கு ஏற்ப, காய் நகர்த்துவதிலும், வசூல் எடுப்பதிலும் விஞ்ஞான ரீதியில் செயல்படுகிறார்.

கேஸ், எப்ஐஆர் என எதுவும் இல்லாமல் கிளப் உரிமையாளர்களை பார்த்துக்கொள்வதால், அவர்களும் மாதம்தோறும் ‘’படி’’ அளந்து விடுகின்றனர். மேலதிகாரிகளுக்கு பங்கு கொடுக்காமல், தான் மட்டுமே வசூல் வேட்டையில் ஈடுபடும் இந்த டிஎஸ்பி.,யின் அசாத்திய திறமையை பார்த்து சக போலீஸ் அதிகாரிகள் வியந்து போகிறார்கள்.

கந்துவட்டி கும்பலுக்காக கடனை வசூலிக்கும் காக்கிகள் பாசம்
தேனி மாவட்டத்தில் விஷம் போல் பரவியுள்ள விஷயம் கந்துவட்டி. எந்தெந்த வகையில் மிக கொடூரமாக வட்டி வசூலிக்க முடியுமோ அந்தளவிற்கு, ஏன் நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு கூட பல்வேறு வட்டி வசூலிக்கும் கும்பல் தேனி மாவட்டத்தில் அதிகமிருக்கிறது. இவர்கள் தங்கள் பகுதியில் உள்ள போலீஸ் அதிகாரிகளை சரிகட்டிய பின்னரே தங்கள் தொழிலை தொடங்குகின்றனர். எனவே மாவட்டத்தின் பெரும்பாலான ஸ்டேஷன்களில் கந்துவட்டி கொடுமை பற்றி புகார் கொடுத்தால் கண்டுகொள்வதே இல்லை. மாறாக கடன் வாங்கியவர்களிடம் “ஏம்பா அவனா உன்னத் தேடி வந்து பணம் குடுத்தான்? நீ தானே தேடிப்போய் கடன் வாங்குன? வாங்குறப்பவே வட்டி இவ்வளவுன்னு தெரிஞ்சு தானே வாங்குன? அப்ப இனிச்சது, திரும்ப கொடுக்கும் போது கசக்குதா?” என பகிரங்கமாகவே போலீசார் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்து மிரட்டுகின்றனர்.

தேனி மாவட்டத்தில் கலவரக்கும்பல், கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்றவைகளை கட்டுப்படுத்தி வெற்றி கண்ட எஸ்பிக்கள் கூட இந்த கந்து வட்டி கும்பலை கட்டுப்பத்த முடியவில்லை. காரணம் கந்துவட்டிக் கும்பல்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட போலீஸ் அதிகாரிகளை அவ்வளவு சிறப்பாக கவனித்து, ‘வளைத்துப்’ போட்டிருக்கிறார்கள். மாதந்தோறும் சரியான முறையில் வசூல் கிடைப்பதால், சில இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் கந்துவட்டி விஷயத்தை கண்டுகொள்வதே இல்லை. அப்படியே புகார்கள் வந்தாலும் கந்துவட்டிக்காரர்களுக்கு சாதகமாக பேசி மிரட்டுவதால், கடன் பட்டவர்கள் தங்களது சொத்துகளை கும்பலிடம் இழந்து வரும் பரிதாபம் நீடிக்கிறது. காவல்நிலையங்கள் தோறும் கந்து வட்டி கும்பலின் கை ஓங்கி இருப்பதை, கட்டுப்படுத்தாமல் போலீஸ் உயரதிகாரிகள் மவுனம் காட்டி வருவதும், ‘பங்கு’ போகிறதோ என்ற சந்தேகத்தை மக்கள் மனங்களில் விதைக்கிறது.

கடற்கரை காற்றுடன், கல்லா கட்டுவதற்கு இன்ஸ். பணியை பிடிக்க போட்டா போட்டி
குமரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களை வசூல் வேட்டை அடிப்படையில் பட்டியலிட்டு, அந்த காவல் நிலையங்களுக்கு பணிக்கு வர பலரும் துடியாய், துடிக்கிறார்கள். அந்த வகையில் கன்னியாகுமரி காவல் நிலையம் முதலிடத்தில் உள்ளது. அதிக எண்ணிக்கையிலான லாட்ஜூகள், தங்கும் விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் என இங்கு நிறைந்து இருக்கிறது. கடற்கரை காற்றுடன், கல்லாவும் பெரிய அளவில் கட்ட முடியும் என்பதால் இந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பணியிடத்துக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறையால் குமரி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டத்துக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் சிலர், கன்னியாகுமரி காவல் நிலையத்தை ரொம்பவும் குறி வைத்துள்ளனர்.

இதில் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவரும் கடுமையான முயற்சியில் இறங்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே குமரி மாவட்டத்தில் எஸ்.ஐ. ஆக பணியாற்றியவர். கன்னியாகுமரி காவல் நிலையத்தை பற்றியும் நன்றாக தெரியும் என்பதால் தனக்கு நெருக்கமானவர்கள் மூலம், எப்படியும் கன்னியாகுமரி இன்ஸ்பெக்டராகி விட முடியும் என துடியாய் துடிக்கிறார். மொத்தத்தில் கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு பணிக்கு வர நடக்கும் போட்டியில் வெற்றிக்கொடி நாட்ட போவது யார்? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது.

‘கமிஷனர்’ மீட்டிங்கா அலறும் போலீசார்
நெல்லை மாநகரத்தில் போலீஸ் கமிஷனராக பாஸ்கரன் பொறுப்பேற்றவுடன் பொதுமக்கள் உள்ளிட்ட யாரேனும் அவரது செல்போனுக்கு போலீசார் குறித்து புகார் தெரிவித்தால் உடனே அவர் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை வாக்கி டாக்கியில் அழைத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விடுகிறார். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அந்த புகார் நிவர்த்தி செய்யப்படுகிறது. நெல்லை மாநகரத்தில் வீடுகள், கடைகளின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக மாதம் தோறும் இரண்டு முறை போலீஸ் கமிஷனர் தலைமையில் நடைபெறும் மீட்டிங்களில் குற்றப்பிரிவு, சட்டம் ஒழங்கு போலீசாரின் தடுப்பு நடவடிக்கை, வழக்குகளில் முன்னேற்றம் மற்றும் வழக்குகளில் ஏன் துப்பு துலக்கவில்லை என கேள்வி கேட்டு போலீசாரை துளைத்தெடுத்து விடுகிறார். இதனால் மாநகர போலீஸ் கமிஷனர் மீட்டிங் என்றால் போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் அலறுகின்றனர். அப்படியாவது குற்றங்கள் குறைந்தால் சரிதான்.

பெண்கள் கிளைச்சிறையில் கல்லா கட்டும் தோழிகள்
மாங்கனி மாவட்டத்தின் பெண்கள் கிளைச்சிறையில் ‘ப-வைட்டமின்’ அலையாய் புரள்கிறதாம். கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் எப்படி கறப்பது என்ற யோசனை, அங்குள்ள சுரங்க அறையில் தான் நடக்கிறதாம். சூப்பிரெண்டும், சிறை ஆஸ்பத்திரி நர்ஸ் ஒருவரும் நெருங்கிய தோழிகளாம். ஒரே இலையில் சாப்பிடும் அளவுக்கு இவர்களின் நட்பு உச்சத்தில் இருக்கிறதாம். இந்த நட்பு வட்டத்ைத சாதகமாக்கிக் கொண்ட நர்ஸ் தான், எல்லா டீலிங்குகளையும் சூப்பிரெண்டுக்கு  முடித்துக் ெகாடுக்கிறாராம். ஒட்டு மொத்தத்தையும் 2பேர் மட்டுமே லபக்கிக் கொள்வதால், அங்கு பணியாற்றும் வார்டன்கள் எல்லோரும் கடுப்பில் இருக்கிறார்களாம். இது தொடர்பாக பலமுறை, உயரதிகாரியான மத்திய சிறை சூப்பிரெண்ட் கவனத்திற்கும் புகார் போனதாம்.

ஆனால், கிளைச்சிறை சூப்பிரெண்ட் விவகாரத்தையெல்லாம் அவர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லையாம். இதனால் கடுப்பான வார்டன்கள் குரூப், விஜிலென்சுக்கு பெட்டிஷன் போட்டிருப்பதுதான், லேட்டஸ்ட் நிலவரம். ஆதாரங்களையும் இணைச்சு அனுப்பியிருக்கோம். அதனால் கண்டிப்பாக பெண்கள் சிறையில் விரைவில் ரெய்டு நடக்கும் என்று சத்தியம் செய்கின்றனர் குரூப் மெம்பர்கள்.

போலீஸ் ஆசி.... குவியுது கரன்சி...!
கோவை புறநகர் பகுதியான செட்டிபாளையம், கிணத்துக்கடவு, மதுக்கரை, தொண்டாமுத்தூர், சூலூர் பகுதியில் சூதாட்டம் அதிகம் நடக்கிறது. தொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள்கூட சூதாட்டத்தில் அதிக தொகை குவிக்கும் ஆசையுடன் களம் இறங்குகின்றனர். புதர் காடு, சுடுகாடு, குளக்கரை என வெட்டவெளி களங்களில் சூதாடும் சிலரை போலீசார் எளிதில் மடக்குகின்றனர். ஆனால் கிளப், பண்ணை வீடுகளில் களை கட்டும் சூதாட்டத்தை போலீசார் கண்டுகொள்வதில்லை. பணம் மட்டுமின்றி, தங்க மோதிரம், தங்க செயின் என எல்லாம் சூதாட்ட களத்துக்கு வந்துவிடுகிறது. சனி, ஞாயிறு தினங்களில் விடிய விடிய சீட்டாட்டம் நடக்கிறது. பணம் குவிகிற காரணத்தால், பல தொழிலதிபர்கள் இதற்கு அடிமையாகி விடுகின்றனர்.

வரம்பு மீறி நடக்கும் இந்த சூதாட்டத்துக்கு கோவை ரூரல் போலீஸ் அதிகாரிகளின் ஆசி நிரம்பவே உள்ளது. சப்-டிவிஷன் போலீஸ் டிஎஸ்பி முதல் ஏட்டு வரை எல்லோரும் நன்றாக காசு பார்த்து விடுகின்றனர். இவர்களது ஆசி நிரம்ப கிடைப்பதால் சூதாட்ட கும்பல் எண்ணிக்கை கூடுகிறது. போலீஸ் அதிகாரிகளின் பாக்கெட்டில் கரன்சியும் குவியுது.

எனக்கே டிரான்ஸ்பரா? பெண்  இன்ஸ்பெக்டர் கொக்கரிப்பு
மலைக்கோட்டை மாவட்ட பகுதியில் கரூர் சாலையில் காவிரி கரையோரம் உள்ள ஜீ பெயர் உள்ள பெண்கள் காவல் நிலையத்தில் உள்ள விஜியான பெண் இன்ஸ்பெக்டர் மிகுந்த திறமைசாலி. இந்த காவல் நிலையத்திற்கு வந்து 3 வருடங்கள் கடந்த நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஒரே காவல் நிலையத்தில் 3 வருடங்களுக்கு மேல் பணியில் உள்ளவர் மாற்றப்பட்ட நிலையில் பெண் இன்ஸ்பெக்டர் மட்டும் மாற்றப்படாமல் அங்கேயே பணியில் தொடர்ந்தார். இதற்கு முன் குற்றச்சாட்டு அடிப்படையில் மத்திய மண்டல ஐஜி இவருக்கு பணியிடை மாற்றம் செய்த உத்தரவையே ரத்து செய்து அதே காவல் நிலையத்தில் பணியை தொடர்ந்தார். அந்த அளவிற்கு பவரானவர்.

காரணம் மனு மீதான விசாரணையை தான் மட்டுமே விசாரித்து அதிக வசூல் செய்ய வேண்டும் என்பது இவரின் முதல் பணியாகும். காவல் நிலையத்தில் உள்ள எஸ்ஐக்கள் எந்த மனுவையும் விசாரிக்க கூடாது. அடிக்கடி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்றாலும், மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர்களை இவர் வந்த பின்னர் தான் வர சொல்ல வேண்டும் என பெண் காக்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இவரின் அடாவடியால் இந்த காவல் நிலையத்திற்கு எந்த எஸ்ஐயும் பணியாற்ற வர முன்வருவதில்லை. தற்போது இந்த காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டருடன் சேர்த்து 4 பேர் மட்டுமே உள்ளனர்.Tags : Chanel ,Encounter Office , Police Chanel: Ink to the Encounter Office
× RELATED கொடைக்கானலில் வாகனப்போக்குவரத்தை...