×

தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பூங்கா அமைக்க 2 ஆயிரம் வீடுகள் இடிக்க திட்டம்: மக்கள் கொந்தளிப்பு, மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு

தஞ்சை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பூங்கா அமைப்பதற்காக தஞ்சையில் 2 ஆயிரம் வீடுகளை இடிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கு அங்கு  குடியிருக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, தஞ்சை உள்பட பல மாநகராட்சிகளை ஸ்மார்ட் சிட்டி ஆக்க மத்திய அரசு தேர்வு செய்தது. இந்த  திட்டத்தில் மத்திய அரசு நிதியில் வளர்ச்சி பணிகள், சுகாதார வசதிகள், சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். இதற்கான நகரங்களை கடந்த 4  வருடங்களுக்கு முன் மத்திய அரசு தேர்வு செய்து நிதியும் ஒதுக்கியது. ஆனாலும் மத்திய அரசு அறிவித்த எந்த மாநகராட்சிகளிலும் இன்னும் ஸ்மார்ட்  சிட்டி திட்டத்தின் கீழ் முழுமை பெறவில்லை.

தஞ்சை மாநகராட்சியும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம் பெற்றுள்ளதால், இங்கு பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டன. ஏற்கனவே இங்கு ஸ்மார்ட்  சிட்டிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கடந்த ஆண்டு கீழ அலங்கத்தில் 2 ஆயிரம் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இன்று வரை அந்த  இடத்தில் எந்த பணியும் நடக்கவில்லை. மைதானம் போல கிடக்கிறது.இப்போது அடுத்த கட்டமாக தஞ்சை 19வது வார்டுக்கு உட்பட்ட மேல அலங்கம், செக்கடி ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளை  இடித்து ஸ்மார்ட் சிட்டி கீழ் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பகுதியி பெரியகோயில் அகழியை ஒட்டி இது  தொடர்பாக நேற்று மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாக சென்று உங்களுக்கு பட்டா இருக்கிறதா என கேட்டு உள்ளனர். இங்கு வசிக்கும் யாருக்கும்  வீட்டுமனை பட்டா இல்லை.

ஆனால் இவர்கள் 100 வருடத்திற்கும் மேலாக இங்கு வசித்து வருகிறார்கள். மாநகராட்சிக்கான வீட்டு வரி ரசீது, மின் இணைப்பு ரசீது உள்ளது. பட்டா  இல்லாததால் வீடுகளை காலி செய்யுங்கள் இங்கு பூங்கா அமைக்க போகிறோம் என கூறி உள்ளனர். இதைக்கேட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  இன்று காலை 2 ஆயிரம் வீடுகளில் உள்ள மக்களும் தங்கள் வீடுகளை இடிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் செய்ய திரண்டனர். தகவல்  அறிந்ததும் தஞ்சை மேற்கு போலீசார் வந்து அவர்களை சமாதானம் செய்தனர். ஆனால் மக்கள் ஆவேசம் அடங்க வில்லை. எங்கள் உயிரை  எடுத்துவிட்டு வீட்டை எடுத்துக்கொள்ளுங்கள் என கொந்தளிப்புடன் கூறினர்.
தகவல் அறிந்த தஞ்சை எம்.எல்.ஏ. நீலமேகம் அங்கு வந்து பொதுமக்களை சமதானம் செய்தார். இதுகுறித்து மாநகராட்சியில் விளக்கம் கேட்கலாம் என  அந்த மக்களிடம் கூறினார். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

இதுகுறித்து மேலஅலங்கம் பாண்டியம்மாள் (55) கூறுகையில், ‘‘எங்கள் தாத்தா காலம் முதல் இங்கு இருக்கிறோம். சிறுக சிறுக சம்பாதித்து இப்போது  தான் வீடு கட்டி உள்ளோம். அதை இடித்தால் நாங்கள் எங்கே போவோம். எங்களை கொன்று போட்டு விட்டு வீட்டை இடிங்கள்’’ என்றார். மேல  அலங்கத்தை சேர்ந்த ராஜாராமன் என்ற விவசாயி கூறும்போது, ‘‘ஸ்மார்ட் சிட்டி திட்டம் கடந்த 4 வருடமாக செயல்படுத்தப்படுவதாக கூறி  வீடுகளைத்தான் இடித்து வருகிறார்கள். இதுவரை உருப்படியாக தமிழ் நாட்டில் ஒரு நகரம் கூட உருவாக்கப்படவில்லை. நகரம் அழகுபடுத்தப்பட  வேண்டியது தான். அதற்காக 100 வருடமாக குடியிருக்கும் மக்களை இப்படி அராஜகமாக காலி செய்வது நியாயமா? தஞ்சை நகரின் இன்னும் பல இடங்களில் சாலை வசதிகள் சரியில்லை. குடிநீர் சப்ளை போதுமானதாக இல்லை. இப்படிப்பட்ட அடிப்படை வசதிகளை  முதலில் சரி செய்து விட்டு பின்னர் பூங்கா அமைக்கும் பணியில் கவனம் செலுத்தலாம்.

2 ஆயிரம் வீடுகளை இடிப்பதாக கூறும் மாநகராட்சி, இந்த மக்களுக்கு மாற்று இடம் என்ன என்பதை சொல்ல வேண்டும். மாற்று இடம் இல்லாவிட்டால்  இனி வரும் காலங்களில் இந்த பகுதி மக்கள் எங்கே போய் வசிப்பார்கள். குழந்தை குட்டிகளுடன் எங்கே போய் இருக்க முடியும். அகதிகளுக்கு கூட  தங்குவதற்கு தற்காலிக முகாம் தருவார்கள். ஆனால் எங்களுக்கு அதுவும் இல்லை. எனவே எங்களுக்கு மாற்று இடம் தரவேண்டும். அல்லது இந்த  இடத்திற்கு பட்டா வழங்கி இங்கேயே எங்களை குடியமர்த்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இதுபோல அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் வீட்டை விட்டு நகர மாட்டோம் உறுதியாக உள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Tags : houses ,park ,Thanjavur , Tanjore, Smart City project, park, people turmoil, stir
× RELATED தேயிலை பூங்காவை பார்வையிட்டு மகிழும் சுற்றுலா பயணிகள்