×

இந்தியா-மாலத்தீவு இடையிலான உறவு வரலாற்றைக் காட்டிலும் பழமையானது: மாலத்தீவு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

மாலே: அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போராட வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்ற பின் முதல் வெளிநாட்டுப் பயணமாக நரேந்திரமோடி இருநாள் அரசு முறை பயணமாக இன்று மாலத்தீவு சென்றுள்ளார். அண்டைநாடுளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கைப்படி, கடந்த முறை பூடான் சென்றிருந்த  பிரதமர் மோடி, தற்போது  மாலத்தீவை தேர்வு செய்துள்ளார். தொடர்ந்து இன்று மாலத்தீவு சென்ற பிரதமர் மோடிக்கு மாலே விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு  அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, வெளிநாட்டினருக்கு அளிக்கப்படும் மிக உயரிய ‘நிஷான் இஸ்ஸுதீன்’ விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி மாலத்தீவு அதிபர் இப்ராகிம்  கவுரவித்தார். தொடர்ந்து, இந்திய அணி வீரர்கள் கையெழுத்திட்டு தந்த பேட்டை மாலத்தீவு அதிபர் இப்ராகிமிற்கு பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.  முன்னதாக, மாலத்தீவு வரும் பிரதமர் மோடி தங்கள் நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்ற வேண்டும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர்  அப்துல்லா ஷாகித் அழைப்பு விடுத்திருந்தார். மாலத்தீவு சட்டப்படி, வெளிநாட்டு தலைவர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்ற வேண்டும் என்றால்,  எம்.பி.,க்கள் அனுமதி பெற வேண்டும். இதன்படி, கடந்த மே 29-ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுவது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டு  ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து, மாலத்தீவு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, இன்றைய தினம் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முகமது நஷீத் மாலத்தீவு பாராளுமன்ற சபாநாயகராக ஆனது முதல் அழைப்பிதழில் என்னை அழைத்த இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த சைகை ஒவ்வொரு இந்தியர்களின் இதயத்தையும் தொட்டுவிட்டது என்றார். உலகத்துக்கே முன்னுதாரணமாக மாலத்தீவு விளங்குகிறது என்று தெரிவித்தார். பயங்கரவாதம் என்பது ஒரு நாடு அல்லது பிராந்தியத்திற்கு மட்டுமல்லாமல் ஒரு முழு நாகரிகத்திற்கும் ஆபத்து என்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசு இன்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்றார். பக்கத்தில் உள்ளவர்களுக்குதான் நமது முதல் முன்னுரிமை. இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவுகள் வரலாற்றைக் காட்டிலும் பழையவை என்றார். காலத்திற்கு முன்பே, நீல கடல் நம் கரையில் கழுவின என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து, மாலத்தீவு அதிபர் இப்ராகிமை சந்தித்து இருதரப்பு உறவு மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தானது. மாலத்தீவுக்காக கிரிக்கெட் அணி மற்றும் கிரிக்கெட்  மைதானத்தை உருவாக்க இந்தியா உதவி செய்ய வேண்டும் என்று மாலத்தீவு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Maldives ,India ,Modi ,parliament , India-Maldives, Cultures, Maldives Parliament, PM Modi
× RELATED நீருக்கடியில் ஆய்வு; இந்தியாவுடன்...