×

திருவள்ளூரில் இருந்து புழலுக்கு செல்லும் பைப் உடைந்து வீணாகும் குடிநீர்: மக்கள் கடும் அவதி

திருவள்ளூர்: சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக, 1944ம் ஆண்டு கொற்றலை ஆற்றின் நடுவில் பூண்டி ஏரி கட்டப்பட்டது. இந்த ஏரி, கடந்த 2005ம் ஆண்டுக்கு  பின்னர் பருவ மழை மற்றும் கிருஷ்ணா நீர்வரத்து காரணமாக நிரம்பியே காட்சியளித்தது. நடப்பாண்டு பருவமழை பொய்த்து விட்டது. மேலும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையின் தண்ணீரும் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை.  இதனால், பூண்டி ஏரி முற்றிலும் வறண்டு கிடக்கிறது.இதையடுத்து, சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்க்க பூண்டி ஏரியை சுற்றியுள்ள புல்லரம்பாக்கம், கைவண்டுர், காரணை, சிறுவானூர், வெள்ளியூர்  உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய பம்ப் ஷெட்களில் இருந்து, ஒப்பந்த அடிப்படையில், ராட்சத மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர்  உறிஞ்சப்பட்டு, நீர் உந்து நிலையத்தில் பெரிய தொட்டியில் சேகரிக்கின்றனர்.

இதற்கென, ஒரு மணி நேரத்துக்கு ரூ.42 வீதம் விவசாயிகளுக்கு பணம்  தருவதாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஒப்பந்தம் செய்துள்ளனர். பணத்துக்கு ஆசைப்பட்டு பகலில் சென்னை குடிநீர் வாரியத்துக்கும், இரவில்  விவசாய நிலத்துக்கும் விவசாயிகள் தண்ணீரை உறிஞ்சுகின்றனர். நீருந்து நிலையத்தில் இருந்து, குழாய்களின் மூலம் புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குடிநீர் வாரிய அதிகாரிகள் அனுப்பி வருகின்றனர்.இவ்வாறு சிறுவானூர் பகுதி விவசாயிகளிடம் இருந்து பைப்லைன் மூலம் நீருந்து நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அந்த  பைப்லைன் உடைந்து பல நாட்களாக சாலையில் வீணாக வழிந்தோடி வருகிறது. இதை, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளனர். இதனால், அரசு பணம் வீணாகி வருவதோடு, தண்ணீரும் வீணாகி  வருகிறது. எனவே, சென்னை மாநகர மக்கள் குடிநீருக்கு அலையும் நிலையில், தண்ணீரை வீணாக்காமல் புழல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல  சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Tiruvallur , Tiruvallur, pulp, pipe, drinking water, people
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு