×

திருமங்கலம் அருகே குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் மறியல்: 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

திருமங்கலம்: திருமங்கலம் அருகே குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் இன்று காலை காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது சுவாமி மல்லம்பட்டி கிராமம். இங்கு 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆண்டிபட்டி-சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இங்கு ஊரணியிலுள்ள கிணற்று தண்ணீரை மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஊரணியில் 3 ஆடி ஆழத்திற்கு மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், 10 ஆடி ஆழத்திற்கு மண் அள்ளப்பட்டுள்ளது. இதனால் கிணற்றில் தண்ணீர் வற்றியுள்ளது. தண்ணீருக்காக மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள செங்கப்படை, நேசநேரிக்கு சென்று மக்கள் தலைச்சுமையாக தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.  இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு இன்று காலை சுவாமி மல்லம்பட்டியில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தாலுகா இன்ஸ்பெக்டர் பவுல் இயேசுதாஸ் தலைமையிலான போலீசார் மற்றும்  வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் செங்கப்படை-சிவரக்கோட்டை சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

2 பஸ்கள் சிறைபிடிப்பு: மறியலின் போது திருமங்கலத்தில் இருந்து கே.வெள்ளாகுளம் மற்றும் மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து சிவரக்கோட்டை வந்த 2 அரசு பஸ்களை போராட்டக்காரர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Tirumangalam , Tirumangalam, drinking water, Galle ponds, stir, traffic vulnerability
× RELATED தண்ணீர் தொட்டியில் விழுந்த மயில் மீட்பு