திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மார்சிஸ்ட் கம்யூ கட்சியினர் வாகன பேரணி: 30 பேர் மீது வழக்குப்பதிவு

திருவாருர்: காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுத்தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், காவிரி பாசன விவசாய சங்கத்தினர் போராடி வருகின்றன.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன பேரணி நடத்திய மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் உள்ளிட்ட பாசன மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 மாவட்டத்தின் பல இடங்களில் தன்னெழுச்சியுடன் போராடி வரும் விவசாயிகளுடன் அரசியல் கட்சிகளும் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. இந்த வகையில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் வாகன பேரணி நடைபெற்றது. 3 நாட்கள் வாகன பேரணிக்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் திருத்துறைப்பூண்டியில் பேரணி சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.            

Related Stories:

>