×

போதிய வசதி இல்லாததால் காவல்துறை வாகனங்களை புறக்கணிக்கும் போலீசார்

திருக்கோவிலூர்: காவல்துறையில் கோயில் திருவிழா, அரசியல் கூட்டங்கள், கலவரம் ஆகியவற்றுக்கு போலீசாரை பாதுகாப்பு பணிக்காக அழைத்துச்செல்ல கூண்டு வைத்த சரக்கு வாகனம் பயன்படுத்தப்பட்டு வந்தது. சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாகவே இந்த வாகனத்தை காவல்துறையில் பயன்படுத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில்  பல்வேறு கருவிகள், வாகனங்கள், கணினி தொழில்நுட்பங்கள் அனைத்தும் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் 60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைபோல் போலீசாரை ஏற்றிச்செல்லும் வாகனம் இன்னும் சரக்கு வாகனம்போல் தான் இருந்து வருகிறது.

அதனை மாற்ற அதிகாரிகள் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. பாதுகாப்பு பணிக்கு 10க்கும் மேற்பட்ட போலீசாரை அந்த வாகனத்தில் அழைத்துச்செல்ல முற்படும்போது அதில் போதிய வசதி இல்லாத காரணத்தினாலும், ஏதோ சரக்கு வாகனம் போன்று உள்ளது என்று கருதி அவர்கள் அந்த வாகனத்தை புறக்கணித்து விட்டு பணம் செலவானாலும் பரவாயில்லை என்று தங்கள் சொந்த பைக்கில் பாதுகாப்பு பணிக்கு செல்கின்றனர். அதோடு மத்திய சிறையில் இருக்கும் கைதிகளை விசாரணைக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் இந்த வாகனத்தைதான் பயன்படுத்துகின்றனர்.

இதில் சிறை கைதிகள் சிலர் இதுபோன்ற வாகனத்தில் ஏற மறுப்பதுடன், அனைத்து வசதிகளுடன் கூடிய சொகுசு வேன் இருந்தால் மட்டுமே அதில் வருவதாக திட்டவட்டமாக கூறிவிடுகின்றனர். போலீசார் மற்றும் சிறைக் கைதிகள் புறக்கணிக்காத வண்ணம் காவல்துறையில் சரக்கு வாகனம்போல் உள்ள வாகனத்தை மாற்றி பயணிகள் வாகனம்போல் மாற்றியமைத்தால் போலீசாருக்கு நன்கு பயன்படும். அவர்கள் சிரமமின்றி பாதுகாப்பு பணியினை செய்வார்கள் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : facilities , Conveniently, the police vehicle, ignoring police
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...