×

பரமக்குடி பஸ் நிலையத்தில் ரோமியோக்களால் மாணவிகளுக்கு தொல்லை: மப்டி போலீசார் கவனிப்பார்களா?

பரமக்குடி:  பரமக்குடி பேருந்து நிலையம் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பெண்களுக்கு ஈவ்டீசிங் தொந்தரவு அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட பெண் போலீசாரின் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
பரமக்குடி சுற்றிலும் அரியனேந்தல், கலையூர், திருவரங்கம், கமுதக்குடி, பொதுவக்குடி, மேலாய்குடி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் தினமும் பேருந்து நிலையம் வந்து படிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு சென்று வருகின்றனர். மேலும், கணினி, தையல். அரசு பணிக்கான தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு தினமும் பரமக்குடி நகர் வந்து செல்கின்றனர். பெரும்பாலும் கிராமங்களுக்கு அரசு பஸ்களை நம்பியே வருகின்றனர். பெண்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிராக பேருந்து நிலையம் முதல் பள்ளி செல்லும் வரை அனைத்து இடங்களிலும் ஈவ்டீசிங் தொந்தரவு அதிகரித்துள்ளது.

பேருந்து நிலையத்தில் பள்ளி, கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து கொண்டு மாணவிகளை கேலி செய்வதும், பெயரை சொல்லி அழைப்பதும், சுடிதார் துப்பட்டாவை இழுப்பதும் என அத்துமீறல்கள் அரகேறி வருகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தால் வெளியில் பெயர் கெட்டு விடும் என்பதற்காகவும், பெற்றோரிடம் சொன்னால் படிப்பை நிறுத்தி விடுவார்களே என்ற அச்சத்தில் சொல்லாமல் மனசுக்குள் வைத்து கொண்டு மாணவிகள் ஒதுங்கி செல்கின்றனர். அப்படி சென்றாலும் விடாமல் பள்ளி மற்றும் கல்லூரி வரை பின்னாலேயே சென்று தொந்தரவு செய்யும் செயல்கள் அதிகரித்து வருகிறது. மாவட்ட எஸ்,பி.யாக மணிவண்ணன் இருந்தபோது, ஈவ்டீசிங்கை கட்டுப்படுத்த பேருந்து நிலையம், பெண்கள் அதிகமாக கூடும் பகுதிகள், பள்ளி மற்றும் கல்லூரி பேருந்து நிறுத்தும் இடங்களில் பெண் போலீசார் சாதாரண உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, மாணவர்களின் தொந்தரவு வெகுவாக குறைந்தது. ஆனால், தற்போது அந்த பிரிவு செயல்படாமல் உள்ளதால் ஈவ்டீசிங் அதிகரித்துள்ளது. ஆகையால் மாவட்ட காவல்துறை நிர்வாகம் உடன் பெண் போலீசாரை கொண்டு தனிப்பிரிவு தொடங்கப்பட்டு  மாணவிகளுக்கும் பெண்களுக்கும் எதிராக நடைபெறும் செயல்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Romeo ,bus station , Paramakkuti, Romeo, troublesome students
× RELATED வடசேரி பஸ் நிலையத்தில் நீர் கசிவு ஆறாக ஓடிய தண்ணீர்