×

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: புளியரை பகுதியில் சுகாதாரத்துறையினர் தீவிர ஆய்வு

செங்கோட்டை: கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் கிளிமானூரைச் சேர்ந்த ஒருவர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்ற ஒருவர் இறந்தார். கொச்சியில் மாணவர் உள்பட சிலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க கேரள எல்லையில் சுகாதாரத்துறையினர் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக - கேரள எல்லையான நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள புளியரை சோதனைச்சாவடியில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டு, கேரளாவில் இருந்து வாகனங்களில் வருவோரில் யாருக்காவது உடல்நிலை பாதிப்பு, காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா? என்பது குறித்து பரிசோதனை நடத்தி வருகின்றனர். காய்ச்சல், உடல்நிலை பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் நிபா வைரஸ் வவ்வால்களின் எச்சில், எச்சம் போன்றவற்றால் பரவுகிறது. எனவே, வவ்வால் கடித்த பழங்களை உண்ணாமல் தவிர்க்க வேண்டும். நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகளை தொடுவதை தவிர்க்க வேண்டும், வவ்வால்கள் இருக்கும் பகுதியில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக்கூடாது. நிபா வைரஸ் பாதித்திருப்பவர்களை தொடுவது உள்ளிட்ட நேரடித் தொடர்புகளை தவிர்க்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நிபாவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும் என பொதுமக்களுக்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரகுபதி, மருத்துவர் சதீஷ், தலைமையிலான குழுவினர் அறிவுரை வழங்கினர்.

சுகாதாரமற்ற பழங்களினால் நிபா வைரஸ் பரவுவதால் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு லாரிகளில் கொண்டு வரப்படும் மா, பலா, ரம்டான் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகளை ஆய்வு செய்த பின்னரே அனுமதிக்கின்றனர். புளியரை எஸ்.வளைவு பகுதியில் உள்ள பழக்கடைகளில் பறவைகள் கடித்த பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளனவா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தினர். தரமான பழங்களை மட்டும் விற்பனை செய்யுமாறும், பறவைகள், அணில்கள் கடித்த பழங்களை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் வியாபாரிகளை கேட்டுக் கொண்டனர்.

Tags : Nifa ,investigation ,Kerala ,area ,Puliyarai , Kerala, Nipa Virus, Puliyarai, Health Department
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...