×

கிரீன் சிக்னல் மாறும் முன் ரயிலை இயக்கிய டிரைவர்: ரயில் நிலையத்தில் மீண்டும் பின்னோக்கி வந்ததால் பயணிகள் குழப்பம்

மயிலாடுதுறை: குத்தாலம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை- திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலை கிரீன் சிக்னல் மாறும் முன் இன்ஜின் டிரைவர் இயக்கியதால் மீண்டும் ரயில் பின்னோக்கி வந்து விசாரணைக்கு பின் 1 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. மயிலாடுதுறை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் காலை 8.10 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு 10.40 மணிக்கு சென்றடையும். திருச்சியில் மதியம் 12.50 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு மதியம் 3.15மணிக்கு சென்றடையும். நேற்று திருச்சியில் புறப்பட்ட மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் குத்தாலம் ரயில் நிலையத்திற்கு மதியம் 2.33 மணிக்கு வரவேண்டிய ரயில் 3.30 மணிக்கு வந்தது. அங்கு பயணிகள் இறங்கிய உடன் ரயில்நிலைய அலுவலர், கிரீன் சிக்னல் போடுவதற்கு முன்பாக ரெட்சிக்னல் இருக்கும்போதே இன்ஜின் டிரைவர் ரயிலை இயக்கினார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குத்தாலம் ரயில்நிலைய அலுவலர் ரயில் ஓட்டுனருக்கு தகவல் அளித்து எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்த செய்தார். அப்போது புறப்பட்ட ரயில் பாதியில் நின்றதை கண்ட பயணிகள் குழப்பமடைந்தனர். பின்னர் நிறுத்தப்பட்ட ரயில் மீண்டும் குத்தாலம் ரயில்நிலையத்திற்கு பின்நோக்கி செலுத்தப்பட்டது. ரயில் நிலையத்திற்கு சென்றதும் நிலைய அலுவலர் எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டார். இதனால் மாலை 4.50 வரை ரயில் குத்தாலம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். பின்னர் 4.50 மணிக்கு அந்த ரயில் புறப்பட அனுமதி கிடைத்தது. அதன்பிறகு 5.15 மணிக்கு மயிலாடுதுறைக்குச்சென்றது. பின்னர் மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து மாலை 5.50 மணிக்கு வழக்கம்போல் மைசூர் புறப்பட்டு சென்றது.

இதுகுறித்து ரயில்வே அலுவலர் ஒருவர் கூறுகையில்,’ இதுபோல் நடைபெறுவது சகஜம் என்றும் அந்த சமயத்தில் ஏதாவது ரயில் வந்திருந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் நடைபெற்றிருக்கும். எந்த ரயிலும் வராதது பயணிகள் நல்ல நேரம். இந்தப்பிரச்னை மேலதிகாரிகள்வரை தெரிந்துள்ளதால் சம்மந்தப்பட்ட ரயில் ஓட்டுனர்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே ஆன்லைன் வசதி இல்லாதபோது ஓட்டுனர்கள் தப்பித்துக்கொள்ள வாய்ப்பு உண்டு. ஆனால் அனைத்தும் ஆன்லைன் ஆக்கப்பட்ட பிறகு இதுபோல் தவறுகள் நடக்கும் நேரத்தில் காட்டிக்கொடுத்து விடுகிறது. நிச்சயம் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

Tags : train station , Green signal, passenger confusion
× RELATED மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே...