×

குளித்தலை அருகே பரபரப்பு: மணல் கடத்தலை தடுக்க முயன்ற அரசு பெண் ஊழியர் மீது தாக்குதல்

குளித்தலை: குளித்தலை அருகே மணல் கடத்தல் கும்பலை தடுக்க முயன்ற பெண் அதிகாரியை தாக்கி விட்டு கடத்தல் கும்பல் தப்பி சென்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மருதூர் வடக்கு 2 பகுதியை சேர்ந்த பொதுமக்கள், இப்பகுதியில் அனுமதியின்றி இருசக்கர வாகனத்தில் திருட்டுத்தனமாக மணல் கடத்தி விற்கிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஏஓ விஜயேந்திரனிடம் தகவல் கொடுத்தனர். இதையடுத்து விஜயேந்திரன் உத்தரவின் பேரில் கிராம உதவியாளர் புஷ்பலதா மற்றும் அதிகாரிகள் மருதூர் வடக்கு பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள காவிரியாற்றில் இருந்து இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தி வந்த 7 பேரை கிராம உதவியாளர் புஷ்பலதா தடுத்தார். ஆனால் இரு சக்கரவாகனத்தில் வந்த 7 பேரும் அவரை தாக்கிவிட்டு தப்பி விட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர் தாக்குதலில் காயமடைந்த புஷ்பலதாவை குளித்தலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் வருவாய்த்துறையினர் மருதூர் வடக்கு 2 பகுதியில் இதே போல் இருசக்கர வாகனங்களில் தொடர் மணல் திருட்டு நடக்கிறது.

இதை தடுத்த அதிகாரி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குளித்தலை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து அதிகாரியை தாக்கிவிட்டு சென்ற 7 பேரை தேடி வருகின்றனர்.

Tags : government employee ,bathroom , Bathing, sand smuggling, government employee, attack
× RELATED கடைநிலை ஊழியரை துன்புறுத்திய உத்தரகாண்ட் நீதிபதி சஸ்பெண்ட்