×

போலி முகவரி கொடுத்து 53 ஜாதி சான்றிதழ் விநியோகம்: பெண் துணை தாசில்தார் மீது பரபரப்பு புகார்

மதுரை: போலி முகவரி கொடுத்து மதுரை மாவட்டத்தில் 53 எம்பிசி சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெண் துணை தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம், பொருந்தலூர் கிராமத்தை சேர்ந்த சங்கிலிமுத்து நேற்று ஆன்லைன் மூலம் மதுரை கலெக்டர் (பொறுப்பு) சாந்தகுமாருக்கு ஒரு புகார் மனு அனுப்பினார். மனுவில் கூறியிருப்பதாவது : நான் தெலுங்கபட்டி செட்டி சாதியை சேர்ந்தவன். இச்சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு, எங்கள் மாவட்டத்தில் (கரூர்) மட்டுமே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்பிசி) சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என அரசாணையில் உள்ளது.

ஆனால், மதுரை அய்யர்பங்களாவை சேர்ந்த ஒரு புரோக்கரும், மதுரை கலெக்டர் அலுவலக வளாக தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் பெண் துணை தாசில்தாரும் சேர்ந்து, எங்கள் இனத்தை சேராத பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, தெலுங்கபட்டி செட்டி என்ற எம்பிசி சான்றிதழ் கொடுத்து வருகின்றனர். மிகப்பெரிய இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து மதுரையில் சங்கிலிமுத்து நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பொருந்தாலூர் கிராமத்தை சேர்ந்த தெலுங்கபட்டி செட்டி இனத்தை சேர்ந்தவர்களுக்கு, தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் மட்டுமே எம்பிசி சாதிச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ஆனால், மற்ற சமூகத்தினர் ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வைத்துள்ளனர். அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அரசு சலுகையை பெற போலியாக சான்றிதழ் பெறுகின்றனர். இதற்கு மதுரை மாவட்டத்தில் போலியான முகவரியை கொடுத்துள்ளனர். இந்த போலி முகவரியை தயாரித்து கொடுப்பவர் மதுரை அய்யர்பங்களாவை சேர்ந்த ராஜேஷ். இவர் புரோக்கராக இருந்து, ஒரு சான்றிதழுக்கு ரூ.6,500 வீதம் பெற்றுக்கொண்டு, சாதிச்சான்றிதழ் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கிறார்.

இதை குறிப்பிட்ட தாலுகாவில் உள்ள துணை தாசில்தார் கவிதாவுக்கு அனுப்பி லஞ்சம் கொடுத்து, ஓரே நாளில் எம்பிசி சான்றிதழ் பெற்று வருகிறார். இதுவரை துணை தாசில்தார் கடந்த 3 மாதங்களில் 53 எம்பிசி சான்றிதழ்கள் வழங்கி உள்ளனர். இது மிகப்பெரிய மோசடி. சம்பந்தப்பட்ட புரோக்கர் மற்றும் பெண் துணை தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு ஆன்லைன் மூலம் புகார் மனுக்கள் அனுப்பிப்பியுள்ளேன்’’ என்றார். இதுதொடர்பாக மதுரை கலெக்டர், மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Fake Address, 53 Caste Certificate, Distribution
× RELATED புதுக்கோட்டை அருகே பட்டியலின மக்கள்...