×

குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியல்: வத்திராயிருப்பில் பரபரப்பு

வத்திராயிருப்பு: குடிநீர் வழங்காததை கண்டித்து வத்திராயிருப்பில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகமெங்கும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால் குடிநீருக்கு கடும் பற்றாக்குறை நிலவி வருகிறது. கிராம மக்கள் பல கிமீ தூரம் பயணித்து தண்ணீரை பிடித்து வருகின்றனர். குடிநீரை சீராக விநியோகிக்கக் கோரி தமிழகமெங்கும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

கொளுத்தும் வெயிலால் நீர்நிலைகள் வறண்டுள்ளன. போர்வெல்களிலும் தண்ணீர் இல்லை. இதனால் மக்கள் குடிநீருக்காக சிரமம் அடைந்து வருகின்றனர். 11வது வார்டுக்கு உட்பட்ட ரோட்டடி தெருவில் 300 வீடுகள் உள்ளன. போர்வெல் வறண்டதால் இங்கு கடந்த 20 நாட்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் நேற்று வத்திராயிருப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மரக்கட்டைகளை சாலையில் போட்டு, குடிநீர் வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், எஸ்ஐ செல்லப்பாண்டி, விஏஓ ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் வத்திராயிருப்பு - திருவில்லிபுத்தூர் சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து தடைபட்டது.

Tags : streets ,Galle , Drinking water, people, road stroke
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...