×

ஜூன் 8 இன்று உலக பெருங்கடல் தினம் கழிவுகளில் இருந்து கடலை (பாது)காப்போம்...

உலகில் உயிர்கள் வாழ நீர், நிலம், காற்று மிகவும் முக்கியமானது. இந்த மூன்றும் மாசுபட்டால் அதனால் ஏற்படும் பாதிப்பை நாம்தான் சந்திக்க வேண்டும். ஆனால், அதைப்பற்றி எல்லாம் நாம் கவலைப்படுவதில்லை. அதனால்தான் நீர்நிலைகள், காற்று, நிலம் மாசுபட்டு கிடக்கின்றன. இவற்றை மீட்டெடுக்கவே ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் உட்பட பல்வேறு தினங்களை கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8ம் தேதி உலக பெருங்கடல் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

கடல்களையும், கடல்சார் உயிரினங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையே இத்தினம் மிக முக்கியமாக வலியுறுத்துகிறது. ஏன் கடல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதை பார்ப்போமா?  இந்த பூமி ஒரு பங்கு நிலம், 3 பங்கு தண்ணீரால் சூழப்பட்டுள்ளதை பள்ளி பருவத்திலேயே படித்திருப்பீர்கள். சரியா...?  உலகில் உள்ள மொத்த தண்ணீரில் கடல் நீர் பரப்பு மட்டும் 90 சதவீதத்திற்கும் மேல் உள்ளது.

இப்போது புரிகிறதா? நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் சராசரியாக 70 முதல் 80 சதவீதம் கடல் மூலமாகவே உருவாகிறது. கடல் நீர் ஆவியாகித்தான் மழையாக மாறி நமது குடிநீர் தேவையை போக்குகிறது. அது மட்டுமா? இன்று சர்வதேச வணிக சந்தையில் கடல் முக்கிய பங்கு வகிக்கிறது. கடலில் பிடிக்கப்படும் மீன், இறால், நண்டு உள்ளிட்டவைகளில் இருந்து பல லட்சம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறுகிறது. அதுமட்டுமல்ல... பல லட்சம் மீனவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். ஆனால், இதை எல்லாம் யாரும் பொருட்படுத்துவதே இல்லை. கடற்கரை ஒரு மாலை நேர சிற்றுண்டி சாலையாகவே மாறி விட்டது.

உணவுகளை தின்று விட்டு பாலித்தீன் பைகள் மற்றும் மீதமுள்ள உணவுகளை கடலில் வீசுவது என கடலை ஒரு மெகா சைஸ் குப்பைத்தொட்டியாகவே மாறி விட்டன. இதனை உண்ட கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்குகின்றன. இதனால் கடல் மாசு மட்டுமின்றி புவி மாசும் கெட்டு விடுகிறது.  மேலும், ஆலை உள்ளிட்ட கழிவுகளை கடலில் கலக்க விடுவதும், எண்ணெய், கழிவுகள் கலப்பதாலும் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. கடல்களில் குறிப்பிட்ட சதவீத பவளப்பாறைகள் அழிந்து விட்டன.

மேலும் உள்ள பவளப்பாறைகள், வேகமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இதே நிலை நீடித்தால் மிகப்பெரிய பேரழிவை நாம் சந்திக்க நேரிடும். ஏற்கனவே கடல் மாசுப்பட்டு கிடப்பதால் பெரும்பாலான கடல் பகுதிகளில் மீன்வளம் குறைந்து வருகிறது. இதனை சரிக்கட்டவே ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ளன. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கடல் நீரை சுத்திகரித்து குடிநீருக்கு பயன்படுத்துகின்றன. எனவே, இனியாவது கடல் வளம் காப்போம் என உறுதி கொள்வோம்.

Tags : oceans ,World Ocean Day , World Oceans Day,Oceans Day,prevent ,sewages
× RELATED கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு