×

தமிழக அரசின் அரசாணை பொருந்தாது டாஸ்மாக் இயங்கும் நேரத்தில் மாற்றம் இல்லை: உயர் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் வணிக நிறுவனங்கள், கடைகள் 24 மணி நேரம் திறந்திருக்கலாம் என்ற தமிழக அரசின் அரசாணை டாஸ்மாக் கடைகளுக்கு பொருந்தாது, எப்போதும் போல் வழக்கமான நேரத்திலேயே டாஸ்மாக் கடைகள் செயல்படும் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டு தமிழக அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளை தங்களுடைய கட்டுப்பாடின் கீழ் கொண்டுவந்தது. அதன்படி, அந்த ஆண்டு காலை 8 மணியில் இருந்து இரவு 12 மணி வரையில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. பின்னர், மதுவிலக்கு கொள்கையின் அடிப்படையில் அரசு மதுக்கடைகள் செயல்படும் நேரத்தையும், கடைகளின் எண்ணிக்கையையும் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.
அதன்படி, கடந்த 2016 சட்டசபை தேர்தலின் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா 500 மதுக்கடைகளை மூடியும், மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை குறைத்தும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி மதியம் 12 மணியில் இருந்து இரவு 10 மணியாக டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் கடைகள், உணவு விடுதிகள், திரையரங்குகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் 24 மணி நேரமும் செயல்படலாம் என்ற அரசாணையை தமிழக அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்த அரசாணையின்படி டாஸ்மாக் கடைகளும் 24 மணி நேரமும் செயல்படுமா என்ற குழப்பம் பல்வேறு தரப்பினரிடம் ஏற்பட்டது.  படிப்படியாக மதுவிலக்கை அறிவித்த தமிழக அரசு 24 மணி நேரமும் கடைகளை திறந்தால் அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கவும் டாஸ்மாக் ஊழியர்களும், சங்கங்களும் திட்டமிட்டிருந்தனர். இந்தநிலையில், தமிழக அரசின் அரசாணை டாஸ்மாக் நிர்வாகத்திற்கு பொருந்தாது. டாஸ்மாக் கடைகள் வழக்கம் போலவே அதன் நேரங்களில் செயல்படும் என டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: டாஸ்மாக் நிர்வாகத்திற்கு என்று தனியொரு அரசாணை வெளியிடப்பட்டு அதன்படி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இந்த அரசாணையின்படிதான் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. வணிக நிறுவனங்கள், கடைகள் 24 மணி நேரமும் செயல்படலாம் என்ற தமிழக அரசின் அரசாணை எங்களுக்கு பொருந்தாது. எனவே, யாரும் குழப்பம் அடைய வேண்டாம். டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு கூறினார்.

Tags : TASM , Government of Tamil Nadu, Government, Taskmak, High Officer
× RELATED டாஸ்மாக் வழக்கில் சென்னை...