×

தையல் தொழிலாளி மகள் நீட் தேர்வில் சாதனை

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்த தையல் தொழிலாளி பன்னீர்செல்வம் (42). இவரது மகள் ஜீவிதா, அனகாபுத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 2015ம் ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்றார். பிளஸ் 2 வகுப்பில் 1,161 மதிப்பெண்கள் பெற்றார். 2019-20ம் ஆண்டுக்கான நீட் தேர்வை மே மாதம் 5ம் தேதி எழுதினார். இத்தேர்வுக்கான முடிவுகள் இரு தினங்களுக்கு முன் வெளியானது. இதில், ஜீவிதா 720 மதிப்பெண்களுக்கு 605 மதிப்பெண் எடுத்துள்ளார்.

இதுகுறித்து ஜீவிதா கூறும்போது, “எனது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது. எங்கள் அப்பா ஒரு தையல் கடையில் வேலை செய்து வருகிறார். அதில், வரும் வருமானத்தில் தான் என்னை படிக்க வைத்தார். ஏழை குடும்பத்தில் பிறந்ததால் மருத்துவராக முடியுமா? என பல நாட்கள் நினைத்துள்ளேன். என் அப்பா, அம்மா மற்றும் ஆசிரியர்கள் எனக்கு ஊக்கம் கொடுத்தனர். இதன் விளைவாக நான் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளேன். மருத்துவராகி ஏழை, எளியோருக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே என் குறிக்கோள். நீட் தேர்வு தோல்வி அடைவோர் தற்கொலை செய்து கொள்வதை ஏற்றுகொள்ள முடியாது’ என்றார். ஜீவிதாவின் தாயார் பவானி கூறும்போது, ‘என் மகள் என்ன ஆக வேண்டும் என நினைக்கிறாரோ அதை படிக்க வைக்க தயாராக உள்ளோம். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சியை தந்துள்ளது’ என்றார்.

Tags : Sewing worker ,examination , NEET
× RELATED இடை நிலை ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு