×

சோழிங்கநல்லூர், அமைந்தகரை பகுதிகளில் குடிநீர் வழங்காததை கண்டித்து மக்கள் மறியல், ஆர்ப்பாட்டம்

சென்னை: குடிநீர் வழங்காததை கண்டித்து சோழிங்கநல்லூர் மற்றும் அமைந்தகரை பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட கண்ணகி நகர், செம்மெஞ்சேரி, பெரும்பாக்கம், எழில்நகர் உள்ளிட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கோடை காலம் தொடங்கி நாள் முதல் இப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க கோரி சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, ‘‘குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்க வேண்டும்’’ என்ற கோஷத்துடன் ‘‘தண்ணீர் வேண்டும்’’ ‘‘ஏரி எங்கே?’’ ‘‘தமிழக அரசே நடவடிக்கை எடு’’ உள்ளிட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியபடி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அண்ணாநகர்: சென்னை மாநகராட்சி 149வது வார்டுக்கு உட்பட்ட அமைந்தகரை பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, 2 நாட்களுக்கு ஒரு முறை மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதுபற்றி பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு அமைந்தகரை ஸ்கைவாக் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த அமைந்தகரை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், உடனடியாக 2 லாரிகளில் குடிநீர் வரவழைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Sholinganallur ,Udhampur , Blockade
× RELATED காஷ்மீரில் 3 தொகுதிகளில் பாஜ போட்டி...