×

மெட்ரோ ரயில் நிலையங்களில் ஸ்மார்ட் கார்டு மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் வசதி ஒரு வாரத்தில் தொடக்கம்

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் ஸ்மார்ட் கார்டு மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் வசதி ஒரு வாரத்தில் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சென்னையில் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. பயணிகள் வருகையை அதிகரிக்க நிர்வாகம் பல்வேறு முயற்சிகளையும், திட்டங்களையும் அறிவித்து வருகிறது. குறிப்பாக, ஷேர் ஆட்டோ, கார் சேவை, சைக்கிள், இருசக்கர வாகன திட்டம் உள்ளிட்டவைகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் செயல்பட்டு வருகின்றது. இதேபோல், 15க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் வசதியையும் நிர்வாகம் அளித்துள்ளது. அதன்படி, இடவசதி உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் அருகாமையில் உள்ள காலி இடங்கள் இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்களை பார்க்கிங் செய்யவும் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, பயணிகள் பார்க்கிங் கட்டணத்தை செலுத்தி ரசீது பெறும் நடைமுறையே உள்ளது.

இந்தநிலையில், இதை டிஜிட்டல் முறையில் கொண்டுவர நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி, இன்னும் ஒரு வாரத்தில் பார்க்கிங் வசதி உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் ஸ்மார்ட் கார்டு மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதம் மற்றும் தினசரி என்ற அடிப்படையில் டோக்கன் முறையிலேயே பார்க்கிங் கட்டணம் செலுத்தும் நடைமுறை உள்ளது. இங்கு ஸ்மார்ட் கார்டு மூலம் செலுத்தும் நடைமுறை கொண்டுவர திட்டமிடப்பட்டது. அதன்படி, தற்போது சிறிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இது சோதனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த சோதனை முழுமையாக முடிந்து பார்க்கிங் வசதி உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் ஸ்மார்ட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தும் வசதி நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் பயணிகளின் நேரம் மிச்சமாகும். இப்பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இவ்வாறு கூறினார்.

Tags : stations ,Metro , Metro train
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...