×

பெட்ரோல் பங்க் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ் கொடுக்காத விவகாரம்: விழா மேடையில் அமைச்சர் ஜெயக்குமாருடன் அதிமுக மாவட்ட செயலாளர் நேரடி மோதல்

*  செல்லூர் ராஜு முன்னிலையில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு
*  அதிகாரிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் நடந்த பெட்ரோல் பங்க் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பிதழ் கொடுக்காததால் அமைச்சர் செல்லூர் ராஜு முன்னிலையிலேயே அமைச்சர் ஜெயக்குமாருடன் வடசென்னை மாவட்ட அதிமுக செயலாளர் நேரடி மோதலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அதிகாரிகள், கட்சியினர், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை சார்பில், புதிய பெட்ரோல் பங்க் திறப்பு விழா தண்டையார்பேட்டையில் நேற்று நடந்தது. விழாவுக்கு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பெட்ரோல் பங்கை திறந்து வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: தமிழகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து 27 பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது. தற்ேபாது தண்டையார்பேட்டையில் 10 ஆயிரம் சதுரடியில் புதிய பங்க் திறக்கப்பட்டுள்ளது. விரைவில் கூடுதலாக 13 பங்க்குகள் திறக்கப்படும். 103 பல்பொருள் அங்காடிகள் அமைக்கப்பட்டு 300 வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இதுபோல, மக்களுக்கு கூட்டுறவுத்துறை சார்பில் புதுப்புது திட்டங்களை அறிவிக்க உள்ளோம். ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் முறைகேடு மற்றும் பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தால் கடை ஊழியர், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இந்தி மொழி திணிப்பை நாங்கள் எதிர்க்கிறோம். மூன்றாவது மொழி தமிழகத்துக்கு வேண்டாம் என்பதுதான் அதிமுக அரசின் முடிவு. ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு வழங்கப்படும்.இவ்வாறு செல்லூர் ராஜு கூறினார்.கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ‘‘வடசென்னை மாவட்டம்  சிறந்த மாவட்டமாக  விளங்குகிறது. துறைமுகத்துக்கு செல்லும் கன்டெய்னர் போக்குவரத்தை சீரமைக்க ₹500 கோடி செலவில் புதிய சாலை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இது முடிந்ததும் பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி பகுதிகளுக்கு வரும் லாரிகள் விரைந்து செல்லும் வகையில் அமைக்கப்படும். துறைமுகத்தில் இரும்பு கழிவுகள் தாதுப்பொருட்களால் மாசு ஏற்படுகிறது. இதனால் சென்னை துறைமுகத்திலிருந்து எண்ணூர் துறைமுகத்துக்கு மாற்றப்பட்டது. மேலும் மெட்ரோ ரயில் பணி தங்க  சாலையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை நடந்து வருகிறது.  இதில் 5 கி.மீ. தூர ரயில்வே பணி முடிந்துவிட்டது. மேலும் 7 கி.மீட்டருக்கு பணி நடந்து வருகிறது’’ என்றார்.

முன்னதாக விழா நேற்று காலை 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு, அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஜெயக்குமார், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் மேடையில் வந்து அமர்ந்தனர். அப்போது வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அதிமுக செயலாளர் ராஜேஷ் திடீரென கோபமாக மேடைக்கு வந்தார். மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், “வடசென்னையில் ஒரு விழா நடைபெறுகிறது. இந்த பகுதி அதிமுக மாவட்ட செயலாளர் நான். அப்படி இருக்கும்போது எனக்கு ஏன் அழைப்பிதழ் தரவில்லை, போன் மூலம் கூட எனக்கு தகவல் சொல்லி இருக்கலாம். தொடர்ந்து நீங்கள் என்னை புறக்கணித்து வருவதுடன், அவமானப்படுத்தி வருகிறீர்கள்” என்று சண்டைபோடுவது போல் கடும் வாக்குவாதம் செய்தார்.உடனே அமைச்சர் ஜெயக்குமாரும், “இது அரசு விழா. அதுவும் எனது துறை சம்பந்தப்பட்ட விழா கிடையாது. கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தான் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். எதுவானாலும் அவரிடம் தான் நீங்கள் (ராஜேஷ்) பேச வேண்டும்” என்று பதிலுக்கு கோபமாக கூறினார். இதனால் அமைச்சருக்கும், மாவட்ட செயலாளருக்கும் மோதல் ஏற்படுவதுபோல ஒரு சூழல் ஏற்பட்டது.

இதனால் மேடையில் இருந்த அமைச்சர் செல்லூர் ராஜு, மதுசூதனன் மற்றும் அதிகாரிகள், அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் அதிர்ச்சியுடன் சம்பவத்தை பார்த்துக் கொண்டு இருந்தனர். பின்னர், அங்கிருந்த அதிமுக நிர்வாகிகளை மாவட்ட செயலாளர் ராஜேஷை சமாதானப்படுத்தினர். இதையடுத்து விழா தொடங்கி நடந்தது. விழா முடித்ததும் யாரிடமும் சொல்லாமல் கோபத்துடன் அமைச்சர் ஜெயக்குமார் காரில் புறப்பட்டு சென்று விட்டார். வழக்கமாக விழா முடிந்ததும் தொலைக்காட்சிக்கு ஜெயக்குமார் பேட்டி அளிப்பார். ஆனால், பத்திரிகையாளர்கள் கேட்டுக் கொண்டும் எதுவும் பேசாமல் கோபமாக சென்று விட்டார். சென்னை, தண்டையார்பேட்டையில் கூட்டுறவு துறை சார்பில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் ஒருவருடன் மேடையில் அதிமுக மாவட்ட செயலாளரே கடுமையாக மோதிக் கொண்ட சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிர்வாகிகளை மதிப்பதில்லை
அமைச்சர், மாவட்ட செயலாளர் மோதல் குறித்து, வடசென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது: மாவட்ட செயலாளராக உள்ள ராஜேஷ், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் தீவிர ஆதரவாளர். மதுசூதனன் ஆதரவாளர்களை அமைச்சர் ஜெயக்குமார் விரோதியாகவே நினைத்து வருகிறார். மேலும், அமைச்சர் ஜெயக்குமார் தினசரி சென்னையில் ஏதாவது ஒரு விழா நடத்துகிறார். விழாவுக்கு, அதிமுக நிர்வாகிகள் யாரையும் அவர் முறையாக அழைப்பதில்லை. தொலைக்காட்சிக்கு பேட்டி அளிப்பதற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறார். அதிமுக கட்சியை பற்றி அவருக்கு கவலையில்லை. தனது சொந்த மகனுக்கு மக்களவை தேர்தலில் சீட் வாங்கி அங்கு வெற்றிபெற மட்டுமே அதிக முக்கியத்துவம் அளித்தார். பெரம்பூர் தொகுதியில் ராஜேஷ் அதிமுக எம்எல்ஏ வேட்பாளராக போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும் இல்லை, செலவும் செய்யவில்லை. அப்படி இருக்கும்போது அதிமுக கட்சியை எப்படி வளர்க்க முடியும்? சென்னை மாவட்டத்தில் இவர் மட்டும்தான் அமைச்சராக இருக்கிறார். அப்படியென்றால், கட்சிக்கு இவர்தான் செலவு செய்ய வேண்டும். சுய விளம்பரம் தேடிக்கொள்ளும் ஜெயக்குமார், அதிமுக கட்சி வளர்ச்சிக்காக எந்த வேலையும் செய்யவில்லை என்று சரமாரி குற்றம் சாட்டினர்.

Tags : petrol punk opening ceremony ,district secretary ,AIADMK ,junction , Petrol punk opening ceremony, ceremony stage, Minister Jayakumar, AIADMK district secretary
× RELATED விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும்...