×

திடீர் திடீரென பெயர்ந்து விழும் மேற்கூரை சிதிலமடைந்த காவல் நிலைய கட்டிடத்தால் போலீசார் பீதி

அண்ணாநகர்: அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலைய கட்டிடம் சிதிலமடைந்துள்ளதால், மேற்கூரையின் கான்கிரீட் அடிக்கடி பெயர்ந்து விழுகிறது. இதனால், போலீசார் பாதுகாப்பற்ற முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.
சென்னை அண்ணாநகர் காவல் நிலைய கட்டிடத்தின் தரை தளத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவு மற்றும் குற்றப்பிரிவும், முதல் தளத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு, டிஎஸ்பி மற்றும் உதவி கமிஷனர் அலுவலகமும் இயங்கி வருகிறது. இதில், போக்குவரத்து புலனாய்வு பிரிவில் இன்ஸ்பெக்டர், உதவி ஆய்வாளர், காவலர்கள் உள்பட 6க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். வாகன விபத்து சம்மந்தமாக பொதுமக்கள் ஏராளமானோர் தினசரி இங்கு வந்து செல்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த காவல் நிலைய கட்டிடத்தை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், மேற்கூரை வலுவிழந்து அடிக்கடி கான்கிரீட் பெயர்ந்து விழுகிறது. அதுபோன்ற நேரங்களில் பணியில் இருக்கும் போலீசார் மற்றும் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓடும் நிலை உள்ளது.

கான்கிரீட் பெயர்ந்த இடங்களில் கம்பிகள் வெளியே தெரிவதால், எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, இதனை சீரமைக்க வேண்டும் என்று போலீசார், தங்களின் உயர் அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், ‘‘காவல் நிலைய கட்டிடம் முறையாக பராமரிக்கப்படாததால், திடீர் திடீரென மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுகிறது. இதனால், பீதியுடன் பணிபுரிந்து வருகிறோம். மேலும், எங்களுக்கென கழிவறை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். இதுகுறித்து உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : death ,climbing palace , police station
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு