×

சென்னை விமான நிலையத்தில் புறா, காக்கைகளால் பாதுகாப்பு கேள்விக்குறி: வெளியே விரட்ட முடியாமல் அதிகாரிகள் திணறல்

சென்னை: சென்னை விமான நிலையத்தின் பின்பகுதியான பொழிச்சலூர், கவுல்பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புறாக்கள் வெயில் காரணமாக, குளிர்ச்சியான இடங்களை தேடி சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் 2வது  தளத்தில் பயணிகள் புறப்பாடு பகுதிக்குள் தஞ்சம் அடைந்துள்ளன. முதலில் 2 புறாக்கள் வந்தன. தற்போது, அது 4 புறாக்களாகி ஆகிவிட்டன. விமான நிலையம் வரும் பயணிகள் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏறுவதற்காக காத்திருக்கும்போது, சாப்பிட்டுவிட்டு கீழே போடும் எஞ்சிய உணவுகளையும் குப்பை தொட்டியில் உள்ள உணவுகளையும் புறாக்கள் சாப்பிடுகின்றன.புறாக்களுக்கு போட்டியாக இரண்டு காகங்களும் நேற்று முன்தினம் மாலையில் இருந்து உள்நாட்டு முனையத்தின் புறப்பாடு பகுதிக்குள் வந்து தஞ்சம் புகுந்துள்ளன.

விமான போக்குவரத்து சட்ட விதிகளின்படி விமான நிலையத்தில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த செக்கியூரிட்டி ஏரியாவுக்குள் எந்தவிதமான பறவைகளோ விலங்குகளோ வருவதற்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது. அதையும் மீறி பறவைகள், விலங்குகள் புகுந்துவிட்டால் விமான நிலைய பாதுகாப்பில் குறைபாடு என்று விமான நிலைய பாதுகாப்புதுறை இயக்குநரகம் முடிவு செய்து, சென்னை விமான நிலைய  பாதுகாப்பு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கும்.
எனவே பயந்துபோன பாதுகாப்பு அதிகாரிகளும் விமான நிலைய அதிகாரிகளும் பறவைகளை வெளியில் விரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந்த பறவைகள் வெளியில் செல்லாமல் கண்ணாமூச்சு விளையாட்டு காட்டுகின்றன. ‘‘விமான நிலைய சட்ட விதிகளின்படி பறவைகள், விலங்குகள் எதுவுமே செக்கியூரிட்டி ஏரியாவுக்குள் நுழையக் கூடாது. எனவே, நாங்கள் மிகுந்த கண்காணிப்புடன் பாதுகாத்து வருகிறோம். ஆனால், கடுமையான வெப்பதை தாங்க முடியாத பறவைகள், விமான நிலைய பின் பகுதி வழியாக உள்ளே நுழைந்துவிட்டன. அவற்றை வெளியேற்ற முயன்று வருகிறோம்.

கடந்த ஆண்டு வனத்துறை ஊழியர்களை அழைத்து வந்து கூண்டு வைத்தும் வலைகளை பயன்படுத்தியும் குரங்குகளையும் காகங்களையும் பிடித்து வெளியேற்றினோம். ஆனால், இந்த ஆண்டு புறாக்களும் உள்ளே புகுந்துவிட்டன. சென்னை விமான நிலையம் கடந்த 3 மாதமாக உச்சக்கட்ட பாதுகாப்பான ரெட் அலார்ட்டில் உள்ளது. எனவே வனத்துறையினரை உள்ளே அழைத்து வந்து, புறாக்களையும் காகத்தையும் பிடிக்க முடியவில்லை. நாங்களே விரட்டிக் கொண்டே இருக்கிறோம். ஓரிரு நாட்களில் முழுமையாக விரட்டிவிடுவோம் அல்லது அவைகளாக சென்றுவிடும்’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகள் தரப்பில் கூறுகையில், ‘இதுபோன்று பறவைகள், விலங்குகள் பாதுகாப்பு பகுதிக்குள் புகுவது மிக மிக ஆபத்தானது. எனவே விமான பாதுகாப்பு அதிகாரிகள் அலட்சியம் செய்யாமல் உடனடியாக பறவைகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் பறவைகளோ குரங்குகளோ விமான நிலைய உள்பகுதிக்குள் வந்துவிடாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : airport ,security guard ,Chennai , Chennai Airport, Pigeon, Cock
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்