வாடகை உயர்வு, பாக்கி அறிவிப்பு ரத்து செய்ய வேண்டும்: கோயில் மனையில் குடியிருப்போர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: வாடகை உயர்வு மற்றும் பாக்கி அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்று இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் தமிழ்நாடு கோயில் மனையில் குடியிருப்போர் சங்கம் மற்றும் 30க்கும் மேற்பட்ட சங்கத்ைத சேர்ந்தவர்கள் புகார் மனு அளித்தனர். அப்போது மாவட்ட தலைவர் ஏழுமலை மற்றும் பல்வேறு சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: 1999ம் ஆண்டு வாடகை சீரமைப்பு என்று பல மடங்கு வாடகை உயர்த்தப்பட்டது. அப்போது அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினர். மேலும் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்ததால் தமிழக அரசு அழைத்து பேசி மறுபரிசீலனை செய்து அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணைகளில் 2001ம் ஆண்டு நில மதிப்பில் குடியிருப்புக்கு 0.1 சதவீதம் வணிகத்திற்கு 0.3 சதவீதம் மற்றும் வாடகை மூன்று வருடங்களுக்கு ஒருமுறை 15 சதவீதம் உயர்த்தி வசூலிக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களிலும் இதேமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணைகள் நடைமுறையில் இருக்கும் போது ஆலய நிர்வாக அதிகாரிகள் அரசாணைகளை கவனத்தில் கொள்ளாமல், ஒவ்ெவாரு ஆலயத்திலும் ஒவ்வொரு விதமாக செயல்படுகின்றனர். குறிப்பாக சென்னையில் சில இடங்களில் 15 சதவீதம், சில இடங்களில் 150 சதவீதம், சில இடங்களில் 350 சதவீதம் என்று முன் தேதியிட்டு உயர்த்தி அறிவிப்பு கொடுத்துள்ளனர். ஒரே ஆணையர் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆலயங்களில் சிலர் நடைமுறையில் உள்ள அரசாணைகளை பின்பற்றியும், சில நிர்வாக அதிகாரிகள் தன்னிச்சையாக பல மடங்கு வாடகையை உயர்த்தியும் அறிவிப்பு கொடுத்துள்ளனர். அதேபோன்று மனைகளின் அளவுகளில் உள்ள வேறுபாடுகளை கருத்தில் கொள்ளாமலும், குடியிருப்பை வணிகம் என்று தவறாக வகைப்படுத்தியும் கணக்கிட்டுள்ளனர்.

சங்கத்தின் சார்பில் அளித்த எந்த மனுக்களையும் பரிசீலனை செய்யாமல், பதில் அளிக்காமல் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். ஆனால் சங்கத்தின் உறுப்பினர்கள் நடைமுறையில் இருக்கும் அரசாணைகளின்படி வாடகையை முறையாக செலுத்தி வருகின்றனர். நிர்வாக அதிகாரிகள் புதிய வாடகையை கணக்கிட்டு மனைகளின் அளவில் மாற்றம் செய்யாமலும், குடியிருப்புகளை வணிகம் என்று மாற்றம் செய்து வாடகை கணக்கிட்டு லட்சக்கணக்கில் பாக்கி இருப்பதாக அறிவிப்பு கொடுத்துள்ளனர். நடைமுறையில் உள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும். பிரச்னைகளை தீர்க்க முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும். எனவே லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.Tags : bakery announcement , Rental hike, cancellation announcement canceled, resident association in the temple complex
× RELATED நல்ல மழை பெய்தும் மகசூலும் குறைவு விலையும் சரிவு விரக்தியில் விவசாயிகள்